Thursday, March 17, 2011

மழைக்காலம்

நத்தை, அட்டை, நுளம்புக்கடி, கிட்டத்தட்ட முட்டிய கிணறுகள்,எங்கள் வீட்டில் துள்ளி வளரத்தொடங்கும் கிளுவை மரங்கள் இவை தாண்டி எனக்கு ஞாபகம் நிற்பவை இரண்டு வாசிகசாலைகள். மழைக் காலமெனில் வெளியில் துள்ளமுடியாது (துள்ளிக் குதித்து விளையாடமுடியாது ) . TV , சீரியல் போன்ற துன்புறுத்தல்கள் அக்காலங்களில் அரிது. எனவே நிறைய வாசிப்போம். பன்மையில் சொல்கின்றேன், ஏனெனில் வாசிப்புப் பழக்கமுள்ள எல்லோரும் மாரி காலத்தில் அதிகமாக வாசிப்பர்.

நான் முதலில் 'மெம்பர்' ஆனது கிழக்கு வாசிகசாலையில் ஒரு மழைக்காலத்தில்தான். அப்பாதான் ஒரு மழைவிட்ட பின்னேரத்தில் அங்கத்துவ பணம் கட்டி உறுப்பினராக்கினார். அன்றுமுதல் இரும்புக்கை மாயாவி, லாரன்ஸ் & டேவிட், ரிப் கிர்பி, ஜானி நீரோ எல்லோரும் என் மாமன்/ மச்சான்கள் போல் நெருங்கி விட்டார்கள்.

மேற்கு வாசிகசாலையில் 'மெம்பர்' ஆனதும் ஒரு மழைக்காலத்தில்தான்.

என் முன்பிறப்புப் புண்ணியமோ என்னவோ பின்னவீனத்துவம், 'கீயூபிசம்' என மண்டையைக்காய வைக்கும் தொந்தரவுகள் இரண்டு வாசிகசாலைகளிலும் என் கண்களில் படவில்லை. (அந்த துர்பாக்கியம் ஒரு சிங்கப்பூர் நூல்நிலையத்தில் 2000ம் ஆண்டு நிகழ்ந்தது. யாரோ ஒரு புண்ணியவான் தமிழில் முதல் முதலில் கீயூபிசத்தில் எழுதிய புத்தகத்தை வாசித்தும் நான் பாயைப் பிறாண்டாதது ஆச்சரியம் )

மழைக்காலங்கள்தான் வளர்ப்புக்கோழிகளின் கெட்டகாலம். இழுப்பு நோய் வந்து போகும் கொஞ்சம். அதைவிட அதிகமானவை மாயமாக மறையும். கோழிகள் மறையும் நாட்களில் சில மரவள்ளி மரங்கள் முழுசாக நிற்க அவற்றின் கிழங்குகள் காணாமற் போகும். ஆட்கள் வசிக்காத, ஆனால் இளசுகள் அப்பப்ப வந்துபோகும் எதோ ஒரு வீட்டில் கோழிக்கறி, மரவள்ளிக்கிழங்கு (சுட்டது அல்லது அவித்தது) , றோஸ் பாண் (தட்டைப் பாண்) என ஒருவகையான் "barbecue party " நடக்கும்.

80 களின் ஆரம்பத்தில் ஒரு மழைக்காலத்தில் தான் வடக்கே* வெள்ளம் பார்க்க நானும் நண்பன் கதிரும் களவாகப் போனோம். அப்ப என்ன வயது 10 , 11 தான் இருக்கும். ஒரு பென்னாம் பெரிய திமிங்கிலம் ஒன்று வடக்கிற்கு இன்னும் வடக்கே இருந்த கடற்கரையில் ஒதுங்கியிருந்தது. அதன் பிரமாண்டம் இன்னும் என் கண்களில்.

மார்கழி மாதம் தொடங்கமுன் பட்டக்காலம் தொடங்கிவிடும். கிட்டத்தட்ட தைப்பொங்கல் வரை முகில் முழுக்கப் பட்டங்கள்தான். படல், பாம்பன், செம்பிலாந்து, கொக்கன், பருந்து, பெட்டிப் பட்டம் என்று வகை வகையாகப் பறக்கும். பட்டம் விடுவது ஒரு கலை எனில், பட்டம் கட்டுவது ஒரு நுண்கலை; முக்கியமாக செம்பிலாந்துப் பட்டம் கட்டுவது.. இதில் எங்களூர் முத்து ஒரு "expert ". :செம்பிலாந்துப் பட்டம் கட்டித் தா," என்று முத்துவிற்குப் பின்னால் ஒரு அரைக் காற்சட்டைக் கூட்டமே அலையும். அண்ணன் இப்ப எந்த நாட்டில் என்று தெரியவில்லை. நான் மில்க்கடை அல்லது சுப்பர் கடையில் 50 சதத்திற்கு வாங்கிய "ரெடிமேட்" பாம்பன் பட்டம் + றேந்தை நூலுடன் சமாளித்து விடுவேன். அல்லது அதற்கு மேல் வீட்டில் காசு பிடுங்க எனது "எகனமிக்ஸ்" அறிவு போதுமானதாய் இருக்கவில்லை. பிறகு கொஞ்சம் வளர்ந்தபின் கொஞ்சம் பெரிய பட்டம் விட்டது/விட முயற்சித்தது தனிக்கதை.

பிறகு வந்த மழைக் காலங்கள் என்றால் ஞாபகம் வருவது துவக்குக் குண்டு, ஏறி குண்டு, "ஷெல்" , விமானக் குண்டு, தலை தெறிக்க ஓடுவது என்பனதான். இவைகள் வருஷம் பூராவும் என்றாலும் மழைக்காலங்களின் சற்று அதிகம். அல்லது மிக அதிகம்.

---------------
*(எங்களூரின் வடக்குப் பக்கம் கொஞ்சம் பள்ளம். அங்கு மழைக் காலங்களில் வெள்ளம் மேவிப் பாயும். இடமே ஒரே வெள்ளக் காடாக இருக்கும்.இன்னும் கொஞ்சம் வடக்கே போனால் கடற்கரை.)