Thursday, April 28, 2011

மழையும் கூரைகளும் ...

'மழை..மழை...அது, பெய்யட்டும்!

வீட்டின் மீது,

வீதியில், வெளியில் -

காட்டின் மீது,

மலையில், மனத்தில் -

இண்டில், இடுக்கில், எங்கெங்கும் -

அது பெய்யட்டும்! -

-கவிஞர் பழமலய்நல்ல மழைகள் இரவுகளில்தான் பெய்யும். மழையை ரசிக்க ஒரு கூரையும் வேண்டும். கூரையில்லாதவன் மழையை ரசித்தால் அவன் ஒரு ஞானி. கூரையில் மழை விழும் சத்தத்தைக் கேட்டுக்கொண்டு, போர்வைக்குள் சுருண்டு படுத்திருப்பது எனக்குப் பிடித்தமான பொழுதுபோக்கு.

ஆரம்பத்தில் நான் சிட்னியில் தங்கி இருந்த அடுக்கு மாடித் தொடரில் நல்ல soundproof. காலையில் எழுந்து கதவைத் திறந்துகொண்டு வெளியில் போகும்போதுதான் இரவு மழை பெய்திருந்தது தெரியும். எனவே மிஞ்சியது பகலில் பெய்யும் அரியண்ட மழை.

யாழ்ப்பாணத்தை விட்டுக் கொழும்பு, கண்டி வந்தபிறகுதான் தகரக்கூரை போட்ட வீடுகளிற் தங்கக்கிடைத்தது. தகரக் கூரையில் மழை பெய்யும்போது கொஞ்சம் அதிரடியாக இருக்கும். தட தட என்று கூரையில் சல்லிக் கற்களை யாரோ எறிவதுபோல் இருக்கும். என்னுடன் அறை வாடகையை பங்கிட்ட சபேசனுக்கு தகரக் கூரையில் மழை பெய்தால் பல்லுக் கூசும் என்பான். மழை பெய்தால் பாட்டுப் பெட்டியை (tape recorder) உச்சத்தில் விட்டு யேசுதாஸ் "கங்கைக் கரை மன்னனடி.. " இனை ஓடவிடுவான். நாடாவில் அடுத்தது "வெண்ணிலா உன் தேரில் ஏறி.. " , பிறகு "வச்சப் பார்வை தீராதடி.." என்று எல்லாம் யேசுதாஸ் . "மச்சான், யேசுதாஸ் அடுத்த ட்ரெயினைப் பிடிக்கப் போறாறே? ஏன் இப்படி அவசரமாகப் பாடுகிறார்?" என்று கேட்டால் மூக்கு நுனி சிவக்கக் "கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை?" என்பான் காட்டமாக. எனக்குக் கற்பூர வாசனை பிடிபடாது, ஆனால் இன்றைக்கும் மழை பெய்யும்போது மேலே தகரக் கூரை இருந்தால் யேசுதாஸ்தான் ஞாபகத்திற்கு வருவார்.

ஊரில் தாத்தா வீடு அரைக் கல்வீடு. இடுப்பு உயரம் வரை சீமந்துக்கட்டு , ஆனால் கூரை தென்னங் கிடுகினால் வேய்ந்தது. சுவரும் கிடுகுதான். மழை அடிக்கும்போது, கிடுகுக் கூரை நனைய ஒருவித வாசனை வீசும். நிச்சயமாக மண் வாசனையல்ல. ஈரக் கிடுகின் வாசனை என்று வைத்துக் கொள்ளலாம். தாத்தாவின் சாக்குக் கட்டிலில் புகையிலை வாசனையும் தவிட்டு வாசனையும் கலந்து வரும். மத்தியானம் 'காச்சிய' ஆட்டிறைச்சி வாசனையும் பின்னணியில் இருக்கும். இப்படியான மழை நாட்களில் , தாத்தாவின் சாக்குக் கட்டிலில் ஏறி இருந்து பழைய ஆனந்தவிகடன், குமுதம், கல்கி, கல்கண்டு, மஞ்சரி, இதயம் பேசுகிறது எல்லாம் மூச்சு விடாமல் வாசித்தது ஒருவித 'அறிவுத்' தேடலாகத்தான் இருக்கவேண்டும்.

க.பொ.த. (சா/த) பரீட்சைக்குப் படித்தது ஐப்பசி, கார்த்திகை, மார்கழி மாதங்களில். இம்மூன்று மாதங்களில் இரவில் எப்படியும் அனேகமாக மழை பெய்யும். போர்த்துக் கொண்டு படுக்கத்தான் சொல்லும். புத்தகங்களைத் தூக்கி வைத்துக் கொண்டு, வெளியில் மழை பெய்ய, படிப்பது சிரமம். போதாக் குறைக்கு தொண்டமானாறு, பலாலி இராணுவ முகாம்களிலிருந்து அப்பப்ப வெடிச் சத்தம், ஷெல் சத்தம், அத்தோடு தூர ஒரு "ஹெலி"இலிருந்து சுடுவது எல்லாம் கேட்கும். வெடிச் சத்தம் எவ்வளவு தூரத்தில் கேட்கிறது?, ஊரில் "பொடியள்" நடமாட்டம் என்ன மாதிரி இருக்கிறது? என்பதை வைத்து போட்டது போட்டபடி இருக்க ஓடித் தப்புவதா அல்லது தொடர்ந்து பாடத்தைப் படிப்பதா என்பதை அப்பா/அம்மா சொல்வார்கள். நான் நல்ல பிள்ளை. புத்தகத்திலிருந்து கண்ணையும், மழைச் சத்தத்திலிருந்து காதையும் எடுக்க மாட்டேன்.


குறிப்பு: இந்த மாதமும் போன மாதமும் , கடந்த 20 ஆண்டு கால காலநிலை அறிக்கைகளின்படி , சிட்னியின் மிகவும் ஈரமான பங்குனியும் சித்திரையுமாகும்.

4 comments:

  1. இரவு மழை பெய்தது. தொடர்மாடி வீடு. பிரச்சனை இருக்காது என எண்ணதீர்கள். கீழே ஜெனரேட்டர் உள்ள இடத்தை தகரத்தால் மூடியிருந்தார்கள். அதன் சத்தம் காதைக் குடைந்தது. உங்கள் நண்பருக்கும் அவ்வாறானதை அறிய மகிழ்ச்சி

    ReplyDelete
  2. நன்றி ஐயா. என் தீர்வு யேசுதாஸ் அல்ல. பதிலாக T . R . மகாலிங்கம்:-)

    ReplyDelete
  3. இங்கும் இதே மழை... :) :) நல்ல பதிவு நண்பா.

    ReplyDelete