Wednesday, May 25, 2011

புல்லாங்குழல்

எண்பதுகளின் இறுதியில் வந்த தமிழ் சினிமாப் பாட்டுக்களைக் கேட்டிருப்பீர்களாயின், ஒன்றைத் தவறவிட்டிருக்க மாட்டீர்கள். அநேகமாகப் பாட்டின் ஏதாவது ஓரிடத்தில் "கூக்கூ குக்குக் கூ" என்று ஒரு வரி இருக்கும். இதைச் சிலவேளை ஒரு பெண்குரல் பாடும், அல்லது அநேகமாக ஒரு புல்லாங்குழல் ஊதும்.

இப்படித் தமிழ் சினிமாப் பாடல்களில் படாதபாடு பட்டுக் கொண்டிருந்த புல்லாங்குழல், மிக நீண்ட வரலாற்றைக் கொண்டது. மனிதன் முதல்முதலிற் பாவிதத இசை உபகரணம் இதுதான் என நம்பப்படுகிறது. ஜேர்மனியில் எங்கோ ஒரு குகையிற் கண்டெடுக்கப்பட்ட புல்லாங்குழல் கிட்டத்தட்ட 35,000 வருடங்களுக்கு முன் செய்யப்பட்டது என்று அறிஞர்கள் அடித்துக் கூறுகிறார்கள். ஐந்து துளைகளைக் கொண்ட இந்தப் புல்லாங்குழல் வல்லூறு ஒன்றின் சிறகு எலும்பிலிருந்து செய்யப்பட்டது.

இன்று இந்தியாவில் பாவிக்கப்படும் புல்லாங்குழல்கள் மூங்கிலினால் ஆனவை என்று எல்லாருக்கும் தெரிந்திருக்கும். தென்னிந்திய கர்நாடக சங்கீதத்தில் பாவிக்கப்படுவது எட்டுத் விரல்-துளைகளைக கொண்டது. வட இந்தியாவில் ஹிந்துஸ்தானி இசையிற் பாவிக்கப்படுவது சற்று நீளமானதாய் இருந்தாலும் ஆறு விரல்-துளைகளை கொண்டது. மேற்கத்தைய புல்லாங்குழல்கள் பெரும்பாலும் உலோகத்தால் செய்யப்படுபவை. மூங்கில் புல்லாங்குழலுடன் ஒப்பிட்டால் செய்முறை/அமைப்பு என்பன மிகச் சிக்கலானவை.

கிழக்கோ மேற்கோ ஒன்று பிடித்தால் மற்றது பிடிக்கும். இப்போது புல்லாங்குழலால் உலகப்புகழ் அடைந்தவர்கள், இல்லாவிட்டால் புல்லாங்குழலை உலகப் பிரபலமாக்கியவர்களில் ஒரு சிலர்.

(1) சேர் ஜேம்ஸ் கால்வே (Sir James Galway )

"The Lord of the Rings" ஆங்கிலப் படத்தில் வந்த ' உருகி ஓடும் தங்க ஓடை' போன்ற இசையைத் தந்தவர். பார்க்கவும், இவர் இரண்டு விதமான புல்லாங்குழல்களைக் கையாள்கிறார். ஒன்று நாதஸ்வரம் போன்று நேரே பிடித்து ஊதுவது (block flute or recorder). மற்றது நாம் எல்லாருமறிந்த பக்கவாட்டில் பிடித்து ஊதுவது.(2) ஜோஹ்ன் பியர் ரம்பால் (Jean-Pierre Rampal 1922 -2000)

புல்லாங்குழலில் 'தனி ஆவர்த்தனம்' வாசிக்கலாம் என்று மேற்குலகிற்கு நிரூபித்தவர். அதற்கு முன், புல்லாங்குழல் பத்தோடு பதினொன்றாக குழு இசையில் வாசிக்கப்பட்டது.

Jean-Pierre Rampal plays Mozart

(3) ஷஷாங் சுப்பிரமணியம் (Shashank Subramanyam) மிக இளம் வயதிலேயே அதீதத் திறமையை வெளிப்படுத்தியவர். இவரின் "REMINISCENCE OF BRINDAVAN" இறுவட்டு எனக்கு மிகவும் பிடித்தது. கீழே உள்ளது வேறு ஒன்று. அவரின் இளங்கன்று போன்ற துள்ளல் நடை கவனிக்கத்தக்கது.(4)Dr என்.ரமணி. இவரின் இறுவட்டு எதுவாகிலும் கண்ணை மூடிக்கொண்டு வாங்குவேன். இன்று வரை ஏமாற்றமடைந்ததில்லை. டி.ஆர்.மகாலிங்கத்திற்குப் பிறகு, அவர் பாணியிலே சில புதுமைகளைப் புகுத்தி கர்னாடக புல்லாங்குழலிசைக்குப் புத்துயிர் கொடுத்தவர்.(5)இமானுவல் பயூட் (Emmanuel Pahud). பிறந்தது ஜெனீவா வில். வசிப்பது பெர்லினில். இவர் புல்லாங்குழல் பழகியிருக்காவிட்டால், ஹொலிவூட்டிற்கு நடிக்கப் போயிருக்கலாம்! ஆசாமி அவ்வளவு அழகாக இருக்கிறார்.----
உசாத்துணை:

(1) http://www.britannica.com/
(2) Wikipedia

Monday, May 23, 2011

பணப் பையைத் தொலைத்தவன்

"நண்பனே" , என்று அந்தக் குரல் என்னை அழைத்தபோது, நான் "தூங்காபி" ரயில் நிலையத்திலிருந்து வெளியே வந்து கொண்டிருந்தேன். அன்று கிறிஸ்தமஸ் தினம் வேறு. 50 அடி நடைக்குள் வரும் மூன்று இடியப்பக் கடைகளில் ஒன்றாவது மூடாமலிருக்க வேண்டும். இல்லாவிட்டால் இரவுச் சாப்பாடும் பாண் தான்.

குரல் வந்த திசையில் தலையை நிமிர்த்திப் பார்த்தேன். 6 அடி 4 அங்குலத்திற்கும் குறையாத உயரத்தில் நம் "சகோதர" இனத்தவன். கொஞ்சம் சதுர முகம். கருப்பான சுருட்டை முடி. மண்ணிறக் கண்கள். இந்த மார்கழி வெக்கையிலும் கோட் , சூட் போட்டிருந்தான். நல்ல வேலையில் இருக்கவேண்டும். சில ஆங்கிலப் படங்களில் வரும் வில்லன் மாதிரிச் சுமாராக இருந்தான். இவன் பூர்வீகம் இத்தாலி அல்லது கிரேக்கமாக இருக்கவேண்டும் என்று எண்ணிக் கொண்டேன். பக்கத்தில் நின்றவள் அவன் மனைவி அல்லது துணைவியாக இருக்கவேண்டும். உயரமாக, ஒல்லியாக வில்லு மாதிரியிருந்தாள். அவளின் காலைக் கட்டிக் கொண்டு ஒரு நான்கு வயது மதிக்கத்தக்க பெண் குழந்தை. நீலக் கண்கள். நீளமான, பொன்னிற முடி. குழந்தை அம்மா மாதிரியே அழகாக இருந்தது.

நான் வாய் பார்த்துக் கொண்டு நின்றதால் பதில் சொல்ல மறந்து போய் விட்டேன் போலிருக்கிறது.

"தொந்தரவிற்கு மன்னிக்கவும், என் பெயர் மார்க்கஸ் செர்ஜோபௌலஸ். இவள் என் துணைவி கிளாரா , இவள் சாரா - என் குழந்தை , அப்படித்தான் நினைகிறேன்" என்று வெடிச் சிரிப்புச் சிரித்தான்.

அவளும் நக்கலுக்குக் குறைந்தவள்போல் இல்லை.

"நானும் அப்படித்தான் நினைக்கிறேன்" என்று கண் சிமிட்டினாள்.

"என் பெயர் சுப்ரமணியம் வாசுதேவன்" , வேண்டுமென்று பாஸ்போர்ட் இல் இருக்கிறமாதிரிச் சொன்னேன்.

இப்ப அவன் கொஞ்சம் கிட்ட வந்தான். குரலைத் தாழ்த்தி, "இன்றைக்குக் கிறிஸ்மஸ் தெரியுமா?" என்றான். 'கிறிஸ்மஸ், கோட் , சூட் போட்ட வெள்ளைக்காரன், அடுத்து என்ன , பைபிளை எடுத்து நீட்டப் போகிறான்' என்று யோசனை ஓடியது.

"எல்லா வங்கிகளும் பூட்டு. கடைகளும் பூட்டு", என்று தொடந்தான். "இடியப்பக் கடை திறந்திருக்கும்" அன்று நான் என் உள்ளூர்த் தகவல்திரட்டை எடுத்துவிடமுன், "நான் என் பணப்பையைத் தொலைத்து விட்டேன்" என்றான்.

பணப்பையைத் தொலைத்துவிட்டுத் 'தேடுவபவர்களை' நான் துபாய் தேய்ராவில், ஷார்ஜா கிரிக்கெட் கிரவுண்ட்டிற்கு வெளியே, சிறிரங்கம் கோவில் உள்வீதியில், கொழும்பு /கோட்டை பஸ் ஸ்ராண்ட்டில், இன்னும் பின்னுக்குப் போனால் யாழ்ப்பாண நகரத்தில் எல்லாம் சந்தித்திருக்கிறேன். எல்லாரும் நிறையத் தூரத்தில் இருந்துதான் வந்திருப்பார்கள். எல்லாருக்கும் அது நண்பர்கள் இல்லாத புது நகரமாகத்தான் இருக்கும். இப்பதான் ஞாபகம் வருது. எல்லாரும் நாகரிகமாக "இங்கிலிஷ்" பேசுவார்கள். எல்லாரும் வீட்டுக்குப் போக பஸ் காசு கேட்பார்கள். மறக்காமல் எங்கள் பெயர், விலாசத்தையும் எழுதி வைப்பார்கள், காசைத் திருப்பி அனுப்பத்தான்!

நான் கொஞ்சம் உஷார் பேர்வழி. 'யாரிடமும் ஒருக்காக்கூட ஏமாந்ததில்லை' என்று மனைவியிடம் சொல்லியிருக்கிறேன். அவள் நம்பியமாதிரித் தெரியவில்லை.

நான் வேண்டுமென்று ஒன்றும் சொல்லவில்லை. ஒரு சிறிய அசௌகரியமான அமைதி. "என் கார் அங்கே நிற்கிறது, பார்" என்று எதிற்பக்கம் சுட்டிக்காட்டினான். "அப்பாடா, இது ரிக்கற் வாங்கப் பணம் கேட்கப்போகும் வகையல்ல" என்று ஒரு சின்ன ஆசுவாசம். தூரத்தில் தெரிந்த காரைப் பார்த்தேன். புத்தம் புதிய காரல்ல. என்றாலும் என் நகரும் தகரக் கூடு போலிருக்கும் காருடன் பார்க்கும்போது எவ்வளவோ பரவாயில்லை. "இவன் பைபிள் பேர்வழிதான்" என்று முடிவு கட்டிக்கொண்டிருக்க, "தந்தையே, பசிக்கிறது, மக்காஸ் போவோம்" என்று சிறுமி அழத் தொடங்கினாள்.

"சரி, உன் நேரத்தை அதிகம் எடுக்க விரும்பவில்லை. உன்னைப் பார்த்தால் கௌரவமான பேர்வழி போலுள்ளாய்; என் காருக்குப் பெற்றோல் தீர்ந்துவிட்டது. முந்தியே சொன்னேனே, என் பணப் பையும் தொலைந்து விட்டது. ஒரு முப்பது டொலர் இப்போது தருவாயாயின், நான் வீடு போய்ச்சேருமட்டுமளவிற்குப் பெற்றோல் போட்டுவிடுவேன், ஒரு நண்பனுக்கு நண்பனாக இந்த உதவியைச் செய்யமாட்டாயா?" என்று கெஞ்சும் தொனியிற் கேட்டான்.

என்ன சொல்லி இவனைக் "கழட்டுவது" என்று யோசிக்க ஆரம்பித்தேன்.

******************

"எங்கேயப்பா இடியப்பம்? வழக்கம்போல் மறந்தாச்சோ?", இது மனைவியின் வரவேற்பு.
"அது பெரிய கதை". கதையைச் சொல்லத் தொடங்கினேன்.

முடிக்கமுன்னே "நான் மிச்சத்தைச் சொல்லுறன். கொடைவள்ளல் அவன் கேட்கமுன்னே அம்பது டொலரைத் தூக்கிக் குடுத்திருப்பீங்கள்" என்றாள்.

"ஹா ஹா பிழை, முப்பது டொலர் மட்டும்தான் இருந்தது. குடுத்துட்டன். அவன் திருப்பியனுப்புவான். "அக்கவுன்ட்" நம்பரெல்லாம் எழுதிக் கொண்டு போறான்."

"வடிவாக அனுப்புவான், வட்டியும் சேர்த்து, இருக்கட்டும் ஒரு கேள்வி"

"கேள்"

"அவள் வடிவோ?"

"சே, சும்மா ஒரு சாதாரண 'லுக்'தான்" என்றேன்!


------------

மக்காஸ் = Maccas = McDonalds
mate - இதை "நண்பன்" என்று மொழிபெயர்ப்பது மிகச் சரியாகாது. வேறு பொருத்தமான சொல் அகப்படவில்லை.

Sunday, May 15, 2011

The boy in the striped pyjamas

புரூனோ ஒரு ஜெர்மன் சிறுவன், ஷ்மூல்
ஒரு யூதச் சிறுவன். இரண்டு பேரிற்கும் எட்டு வயது. ஒருவன் முள்வேலிக்கு உள்ளே, மற்றவன் வெளியே. இரண்டு பேரிற்குமிடையேயுள்ள பாசாங்குகளற்ற உண்மையான நட்புத்தான் கதை.


இனி, படம்.

ரால்ஃப் இற்கு நாஜிப்படையில் உயர் பதவி. ரால்ஃப் இன் மகன் புரூனோ, மிகத் துறுதுறுப்பானவன். வீட்டில் சும்மா குந்தியிருக்கப் பிடியாது. நண்பர்களுடன் ஓட்டம், பாட்டம், கற்பனை "ஏரோப்பிளேன்" விடுவது என்று பொழுதைப் போக்குபவனுக்கு, தந்தையின் பதவியுயர்வுடன் கூடிய இடமாற்றம் அவ்வளவாக ஒத்துப் போகவில்லை. போதாக்குறைக்குப் புது வீட்டில் மூன்றே மூன்று மாடிகள்தான்! புரூனோவின் அக்கா கிரெட்டெல்- பன்னிரண்டு வயசு. தம்பிக்குத் தான்தான் முதலாளி என்று நினைப்பு வேறு.புது ஊரிற் பள்ளிக் கூடம் இல்லைப் போலிருக்கிறது. அக்காவிற்கும் தம்பிக்கும் சேர்த்து ஒரு வாத்தியார் வீடு வந்து பாடம் சொல்லிக் கொடுக்கிறார். வாத்தியாரின் இம்சைவேறு தாங்க முடியவில்லை. "ஜெர்மனியரின் உன்னதம், யூதர்களின் நரித்தனம், .." என்று வெளுத்து வாங்குகிறார். விளைவு, கிரெட்டெல் தீவிர நாஜி விசுவாசியாகின்றாள். ஆனால் புரூனோ குழம்பிப் போகின்றான்.

வீட்டில் இருக்கும் வயதான தளர்ந்த வேலையாள் 'பவல்'தான் புரூனோவிற்கு ஒரே ஆறுதல். பவல் தான் படத்தில் வரும் முதலாவது "வரி வரியான" பிஜாமா அணிந்த முதல் ஆள். என்றாலும் அவர் கதையின் பிரதான பாத்திரம் இல்லை.

என்ன நடந்தாலும் வீட்டு வளவின் பின்புறம் போகக்கூடாது என்று அம்மாவும், அதைவிடக் கடுமையாக அப்பாவும் உறுக்குவது புரூனோவின் ஆர்வத்தை இன்னும் கிளறுகின்றது. ஒருநாள் எல்லாருக்கும் "டிமிக்கி" கொடுத்துவிட்டு, வளவின் பின்புறத்தினூடாக, ஒரு சிற்றோடையைக் கடந்து, முட்கம்பிவேலியால் சூழப்பட்ட ஒரு பெரிய "பண்ணை"யை அடைகின்றான். அவன் பண்ணை என்று குறிப்பிடுவதுதான் நாஜிகளின் ஓஸ்விச் (Auschwitz) வதை முகாம் என்றும், அவன் தந்தைதான் அதன் பொறுப்பாளர் என்றும் பின் புரிய வரும். (குறிப்பு: படத்தில் எந்த இடத்திலும் அந்த முகாம் ஓஸ்விச் என்று நேரடியாகச் சொல்லப்படவில்லை).

முட்கம்பி வேலியின் ஒரு மூலையில், தன்னந்தனியாக உட்கார்ந்திருக்கிறான் ஷ்மூல். இவன்தான் படத்தலைப்புக் குறிப்பிடும் "வரி வரியான பிஜாமா அணிந்த சிறுவன்". சேர்ந்து விளையாட ஒரு சம வயதுச் சிறுவன் கிடைத்ததால், தொடர்ந்து ஒவ்வொரு நாளும் 'பண்ணைக்கு' வருகின்றான் புரூனோ. புதிய நண்பன் ஷ்மூல் எப்போதும் முள்வேலிக்கு அந்தப்பக்கம். புரூனோ இந்தப் பக்கம். ஒரு நாட் பந்து விளையாடுகிறார்கள். சில நாட்களில் draughts. ஷ்மூல் எப்போதும் பசியுடன் இருப்பதை உணர்ந்த புரூனோ, வீட்டிலிருந்து இரகசியமாகத் தின்பண்டங்களைக் கொண்டுவர மறப்பதில்லை.

இதற்கிடையே, புரூனோவின் அம்மா 'எல்சா' விற்குக் கணவன் ரால்ஃப் உண்மையில் என்ன 'தொழில்' செய்கிறான் என்று புரிய வருகின்றது. பின்னே, கணவன் மனைவிக்கிடையில் குடும்பி பிடிச்சண்டை. "இது என் குழந்தைகள் வளரும் இடம் இல்லை, (அம்மாவின்) ஊருக்குக் குழந்தைகளுடன் போகின்றேன்" என்று ஆயத்தம் பண்ணுகிறாள்.

மிகுதி வெள்ளித் திரையில் ...

படத்தின் கொழுக்கி (trailer)அல்லது

IMDb Trailer (துல்லியமானது)


குறிப்பு

(1) படம் அவுஸ்திரேலியாவில் M என வகைப்படுத்தப் பட்டுள்ளது. M என்பது 15 வயதிற்கு மேற்பட்டோருக்கு உகந்தது. ஆனாலும் எந்த இடத்திலும் 'இசகு பிசகான' காட்சிகள் இல்லை. நாஜி வதைகளை பற்றிய படம் என்பதால் 15 வயதிற்கு உட்பட்டோர் தவிர்ப்பது நலம் என்கிறார்கள் . உட்குறிப்பு ஒரு சாதாரண தமிழ்ப் படத்தில் இருக்கும் வன்முறைகளுடன் பார்த்தால் இதில் உள்ளது ஒன்றுமில்லை.

(2) நீங்கள் சிட்னிவாசியாயின், வென்ற்வே(ர்)த்வில் சமூக நிலைய, நூல் நிலையத்தில் DVD யை ஒரு சதம் செலவு செய்யாமல் இரவல் வாங்கலாம்.

Thursday, May 5, 2011

வழுக்கை இலக்கியம்

வரைவிலக்கணம் : ஒரு வழுக்கையனால்  வழுக்கையரால் வழுக்கையர்களுக்காக எழுதப்படும் இலக்கியம்  "வழுக்கையிலக்கியம் " எனப்படும்.

வழுக்கையரைப் பற்றி நிறையக் கட்டுக் கதைகள் உண்டு, என்றாலும், மிக அபத்தமானது 'இளம் பெண்களுக்கு வழுக்கையரைப் மிகப் பிடிக்கும்' என்பது. எனக்குத் தெரிய மாப்பிள்ளை மொட்டை என்று பெண்களால் தூக்கி எறியப்பட்ட ஆண்களின் எண்ணிகையை ஒரு பெரிய "தரவுக் கட்டு" அட்டவணையில் போட்டால் அதன் 'அடி, நுனி' தேட சிவபெருமான் புதிதாக ஆள் தேட வேண்டும். அத்தோடு 'மாப்பிள்ளைக்கு தலைமுடி போதாது" என்று வந்த "சம்பந்தத்தைத்' தட்டிக்கழித்த பெண்களின் 'நிரலும்' நீளமானது. 'பசையுள்ள' வழுக்கையரின் கதை வேறு.

வழுக்கை என்பது ஒரு நீண்ட நாள் நண்பன்/எதிரி. கிட்டத்தட்ட பதினாறு, பதினேழு வயதுகளில் நமக்குக் கிட்ட வந்துவிடுவான். பிறகு போ என்றாலும் போகமாட்டான். ஆரம்ப நாட்களின், அவன் ஒரு ரகசிய சிநேகிதன்.எமக்கு மட்டும் தெரிவான். 'எனக்கு முடி' கொட்டுது என்றால் எல்லாரும் சிரிப்பார்கள். ரகசியமாக "நெரில்", "கேர்ன்" என்று வாங்கி வைத்து காலையிலும் மாலையிலும் டியுஷன் போகுமுன்னும் தலை தேயத் தேய மசாஜ் செய்வீர்கள். வழுக்கையரை யாரேனும் கிண்டல் செய்தால் ரத்தம் கொதிக்கும். 'காவோலை விழக் குருத்தோலை சிரிக்குது' என்று பெரிய மனுசத்தனமாக யோசித்துக் கொள்வீர்கள். வழுக்கையயரில் மிகப் பிரபலமானவர்கள் எல்லாம் எங்கப்பன் பாட்டன் போல் உணர்வீர்கள். யாராவது வகுப்பில் 'வழுக்கையன் ஜோக்" சொன்னால் சங்கடமாக உணர்வீர்கள். இத்தனைக்கும் நீங்கள் ஒரு ஆரம்பகால வழுக்கையன்; உங்களைத் தவிர வேறு ஒருவருக்கும் நீங்கள் 'முடி' இழந்து கொண்டிருப்பது புரியாது. ம்ம்ஹூம், இதெல்லாம் சொல்லிப் புரிகிற விஷயமா?

'வழுக்கையர் மூளைசாலிகள்" என்றுதான் சொல்கிறார்கள் ! அது வடிகட்டிய பொய் என்று தெரிந்தாலும் ஒத்துக் கொள்ள மாட்டேன்.

வழுக்கைக்கான சிகிச்சை முறைகள்

கீழே உள்ள எதுவும் வேலை செய்யாது. ஆனால் "ஆரம்ப வழுக்கையர் சொல் கேளார்" என்பது வழுக்கையர் வாக்கு என்பதால் எழுதுகின்றேன்.

(1) சிரசாசனம் செய்யலாம், எச்சரிக்கை: சிரசாசனப் பயிற்சி ஆரம்பிக்கமுன் ஒரு தகுதி பெற்ற வைத்தியரை ஆலோசிக்கவும்.
(2) உங்கள் வழுக்கைத் தலையை மாட்டினால் நக்கப் பண்ணலாம்.மாட்டின் சொரசொரப்பான நாக்கு, முடி வளர்ச்சியைத் தூண்டும். திரும்ப எச்சரிக்கை பின்விளைவுகளுக்கு நான் பொறுப்பல்ல.
(3) மருதாணியை அரைத்துத் தலையில் பூசலாம். தலை சிவப்பாக மாறப்போவதால், அடுத்த சில நாட்களுக்கு "சிக்" லீவு அடிக்க வேண்டிய தேவையுண்டு. வேலை போனால் என்னிடம் மல்லுக்கு வரவேண்டாம். எதற்கும் முன்னெச்சரிகையாக "பயோடேட்டா" வைச் சோடித்து வைக்கவும். www.seek.com முதலிய தளங்கள் உதவியாக இருக்கும்.
(4) ஒரு கப் சூடான வெந்நீரில் ஒரு தேக்கரண்டி கடுகு' இனை இட்டு ஐந்து நிமிடங்கள் சூடாக்கவும். பிறகு அதை , அவசரப்பட்டுத் தலையில் வைத்து மசாஜ் பண்ண வேண்டாம். குடிக்கவும்.

கீழே உள்ளது பண்டைய எகிப்தில் கிட்டத்தட்ட 1100 வருடங்களிற்கு முன்
 பாவிக்கப்பட்டது என ஒரு வலைத்தளம் கூறுகின்றது.

சிங்கம், நீர் யானை, முதலை, பாம்பு, தாரா என்பவற்றின் கொழுப்பைத் தலையிற் தேய்க்கவும். தனித் தனியாகவா? அல்லது சேர்த்தா? என்ன விகிதத்தில்? என்ற விபரம் கிடைக்கவில்லை. ஈமெயில் அனுப்பியுள்ளேன் பதில் கிடைத்தால் பிறகு பதிகிறேன்.

மேலேயுள்ளதைப் பார்க்கும்போது கடந்த 1100 வருடங்களாக வழுக்கைத் தலைக்கு மருத்துவத் சிகிச்சையில் பெரிய மாற்றங்கள் வரவில்லைப் போல் இருக்கிறது. என்ன நான் "நெரில்", "கேர்ன்"  வைத்துத் தேய்த்தேன், 1100  வருடங்களுக்கு முன் முதலை எண்ணெய், பாம்பு எண்ணெய் ...

வழுக்கையை மறைப்பதற்கான ஒரு வழிமுறை அல்லது செல்லத்தம்பி வாத்தியாரின் முறை.

முதலில் கெட்ட செய்தி: சுத்தமான முழு வழுக்கையர் இதைப் பாவிக்க முடியாது. தலையின் பக்கங்களில் முடி இருக்க வேண்டும். எனக்குத் தெரிந்து, எங்களுக்கு ஆறாம் வகுப்பில் 'சமூகக் கல்வி' படிப்பித்த செல்லத் தம்பி வாத்தியார்தான் இதை முதலில் பாவித்தவர்.

தலையின் ஓரங்களில் வளரும் முடியை, எவ்வளவு நீளமாக வளர்கிறதோ அவ்வளவு நீளமாக வளர்க்கவும். பிறகு, அதை லாவகமாகச் சீப்பினால் இழுத்து (வாரி) ,தலையின் வழுக்கையான பிரதேசங்களை  மூடி மறைக்கவும். எஞ்சும் தலை முடியை வெட்டி விடவும். கடுங் காற்று அடிக்கும் இடங்களைத் தவிர்க்கவும். துரதிஷ்ட விதமாகச் செல்லத்தம்பி வாத்தியாருக்குக் காப்புரிமை பற்றித் தெரிந்திருக்கவில்லை. இரண்டு அமெரிக்காக்காரங்கள் முந்திக் கொண்டார்கள். நம்பாவிட்டால் கீழே பார்க்கவும்.

யு.எஸ். காப்புரிமை இலக்கம் 4,022,227

அவர்களுக்கு "இக் நோபல்" பரிசுகூடக் கிடைத்தது என்பது உபரித் தகவல்.

"காதலித்துப் பார், உன்னைச்சுற்றி ஒளிவட்டம் தோன்றும்"  என்று ஒரு கவிஞர் எழுதுகிறார். இது கவிதையா இல்லை மொக்கையா என்ற ஆராய்ச்சிகளைப் பிறகு பார்ப்போம். ஆனால் நாம்  சும்மா இருக்கவே நம்மைச் சுற்றி ஒளி வட்டம் தோன்றுகின்றது. என்ன, அருகில் ஒரு  *ஒளிமுதல் இருக்க வேண்டும்.

------------------------------------------
*'ஒளிமுதல்' என்றால் என்ன என்று புரியாதவர்கள் சின்ன வயதில் தமிழில் விஞ்ஞானம் படித்தவர்களை அணுகவும்.

Image: cartoon  character Caillou

தரவுக் கட்டு -  database
நிரல் -list
சோடித்து - அலங்கரித்து