Tuesday, June 28, 2011

என் மீன்பிடித் தொழில்...

70 களின் இறுதி அல்லது 80 களின் ஆரம்பம். நாலாவதோ அல்லது ஐந்தாவது வகுப்பில் படித்துக் கொண்டிருந்தேன். சரியாக ஞாபகமில்லை.

ஒரு சனிக்கிழமை காலைச் சாப்பாட்டு நேரம். நான் ஏழாவது தோசையைப் பிய்த்து தேங்காய்ச் சம்பலுடம் கலந்து வயிற்றிற்குள் தள்ளிக் கொண்டிருக்ககொண்டிருக்க, விக்கி வந்தான். விக்கி என் வகுப்புத் தோழன் மற்றும் நண்பன். "அன்பின் நணபண் கண்ணனுக்கு" என்று எழுதப் பழகத் தொடங்கிய காலத்திலேயே தீபாவளிக் கார்ட் எல்லாம் போட்டிருக்கிறான். என்னை விட இரண்டே மாதங்கள் மூத்தவன். அந்தக் குற்றத்திற்காக "விக்கி அண்ணா" என்றெல்லாம் ஒரு காலத்தில் அவனைக் கூப்பிட்டு இம்சைப் படுத்தியுள்ளேன்.

விக்கி குழம்பிப் போய்விட்டான். கைகளைப் பின்னுக்குக் கட்டிக் கொண்டு பெரிய மனிசன் மாதிரி குறுக்கும் நெடுக்குமாக நடந்தான். கனநேரம் ஒன்றும் பேசவில்லை. முதல்நாள் இரண்டு பேரும் போட்ட பெரும் திட்டத்தை நான் மறந்துவிட்டேனோ என்று பயந்திருப்பான். திட்டத்தின்படி நான் காலமைச் சாப்பாட்டை முடித்தவுடன் இரண்டு சட்டை ஊசிகள், நீளமான நைலோன் நூல் (ஒரு சாண் நீளமான பூவரசங் கட்டையில் வடிவாகச் சுற்றியது), ஒரு பழைய லக்ஸ்பிறே மாப் பேணி என்பவற்றுடன் அவன் வீட்டுக்குப் போயிருக்கவென்டும். எதிர்பாரதவிதமாகத் தோசை இடையிற் குறுக்கிட்டு விட்டது. காலைமைச் சாப்பாடு தோசை என்றால் எப்படியும் பிந்திவிடும்.

திட்டங்கள் இரகசியத் திட்டங்கள் என்பதால் அம்மா, அப்பா, சகோதரங்கள் இருக்கும்போது கதைக்கமுடியாது. விக்கியின் நிலைமை தர்மசங்கடம். என்னை முழிசிப் பார்த்தான். நானோ தோசையுடன் பிஸி. இலேசாகப் பல்லை நறநறத்த மாதிரியிருந்தது.

"மறந்து போனியே?" என்று மெல்லமாகக் கேட்டான்.

"நீ போ, நான் வாறன்," அதைவிட மெல்லமாகச் சொன்னேன்.

விக்கி வீட்டில் ஒரு பெரிய "பிலிப்ஸ்" ரேடியோ இருந்தது. அது "செந்தூரப் பூவே, செந்தூரப் பூவே, ஜில்லென்ற காற்றே.."" என்று உரத்துப் பாடிக் கொண்டிருக்க வீட்டினுள் நுழைந்தேன்.அவனின் பங்குக்கு இரண்டு சட்டை ஊசிகள், நீளமான நைலோன் நூல் (ஒரு சாண் நீளமான பூவரசங் கட்டையில் வடிவாகச் சுற்றியது), ஒரு பழைய லக்ஸ்பிறே மாப் பேணி என்பன ஆயத்தமாக இருந்தன.

"எடே ரெடியே" என்று மறந்துபோய் உரத்துக் கேட்டு விட்டேன். பதிலாக ஒரு முறைப்புத்தான் கிடைத்தது. பிறகு, "ஸ்ஸ்ஸ்...மெல்லமாகச் சொல்லக் கூடாதெ? இப்ப எதுக்கு ரெடி எண்டு கேள்வி வரப்போது" என்றான். நல்ல வேளை, தோசைக் கடை மாதிரி அலறிக் கொண்டிருந்த ரேடியோவின் புண்ணியத்தில் யாருக்கும் என் குரல் கேட்டிருக்கவில்லை போல.

விக்கிக்கு நான்கு அண்ணன்மாரும் மூன்று அக்காமாரும். கடைக்குட்டி என்பதால் எல்லோரினதும் அன்பு மழையில் நனைந்து கொண்டிருப்பான்.
அன்றைய அன்பு மழை மூத்த அண்ணர் வடிவத்தில் வந்தது.

"டேய் விக்கி, இஞ்சை வா". வந்தான்.

"குளிச்சியே காலமை?"
"இல்லை"
"நேற்று?"
"இல்லை"
"முந்த நாள்?"
"ஓ குளிச்சேனே", வலு உசாராகச் சொன்னான்.

"ரண்டு நாளாக் குளிக்கல்லை, வெளிக்கிட்டுட்டாய் சுத்த; அங்கை பார் கண்ணனை ! காலங்காத்தாத்லை குளிச்சுப் பவுடர் பூசி வந்திருக்கிறான். ஓடு கிணத்தடிக்கு" என்று விரட்டினார். இதிலை "பவுடர் பூசி" என்பது மெய். நான் கடைசியாகக் குளித்தது அதுக்கு முந்திய ஞாயிறு என்பதைத் 'தன்னடக்கம்' காரணமாக வெளிவிடவில்லை.

இவன் குளித்து முடிந்துவர இன்னும் அரை மணித்தியாலமாவது எடுக்கும். திட்டம் இரண்டாவது முறையாகப் பிந்திப் போயிற்று.

******************

ஒருமாதிரி எல்லாருக்கும் போக்குக் காட்டி வெளிக்கிட்டாயிற்று. பள்ளிக்கூடம் தாண்டி நடந்துகொண்டிருக்க ஓணான் முருகேசர் எதிரில் வந்தார். (எங்கள் ஊரில் இப்படி எல்லாருக்கும் ஒரு "மூன்றாவது" பெயர் உண்டு. அதைப்பற்றிப் பிறகு பார்ப்போம்.)

"தம்பியவை, எங்கை கையிலே பேணியோடை?" தலையை மேலும் கீழும் ஆட்டியபடி கேட்டார்.

என்ன விடை சொன்னாலும் மனிசன் வீட்டை போய் அப்பாவைச் சந்தித்து வத்தி வைக்காமல் ஒரு வாய் கள்ளுக் கூடக் குடிக்கமாட்டுது.

"அப்பு, பள்ளிக்கூடத்தில கைவேலைப் பாடத்திற்கு மாப் பேணி சேர்க்கச் சொன்னவை. அதுதான் சேர்க்கிறம். உங்கடை வீட்டிலயும் ஏதாவது ஒரு லக்ஸ்பிறேப் பேணி சும்மா இருந்தால், தாறீயோணை?" வாயில் வந்த பொய்யை எடுத்து விட்டேன்.

"தம்பியவையள் நான் அவசரமாகப் போகோணும், பிறகு பாப்பம் என்ன?," ஆசாமி நழுவினார்.


*************************

முனியப்பர் கோயிற் குளம் 'அவ்வளவு' ஆழமானதல்ல. அதன் தெற்குப் பக்கம் தண்ணீர் ஆழம் குறைவு. வடக்குப் பக்கம் ஒரு வளர்ந்த ஆளை மூழ்கடிக்கக் கூடியளவு ஆழம் இருக்கும். ஒரு பனையளவு ஆழம் இருக்குமென்று எங்களோடு படித்த "அளப்பு மன்னன்" குஞ்சன் சொல்லுவான். நல்ல சுத்தமான தண்ணீர். பக்கத்திலுள்ள தோட்டங்களுக்கு அதிலிருந்துதான் "இறைப்பு மிசின்" பூட்டித் தணணீர் விடுவார்கள். ஒன்றிரண்டு மாரிகாலங்களில் முதலைகள் வசித்திருந்த குளம் அது என்பது இப்ப அவசியமில்லை. எங்களுக்குத் தேவைப்பட்டது, குளத்திலிருந்த மீன்கள். சின்னதாக, பெரிதாக, கறுப்பாக, வெள்ளியாக என்று நிறைய மீன்கள். சின்ன மீன்கள் அனேகமாகக் கூட்டமாக நீந்தும். ஒரு சின்னக் கல்லெடுத்து எறிந்தால், ஒரு கணத்திற் சிதறி ஓடி, மீண்டும் கூட்டமாகச் சேர்ந்து ஓடும். எங்கள் திட்டம் பெரிய மீன்களைப் பிடிப்பதுதான். பெரிய மீன்கள் குளத்தின் வடக்குப் பக்கத்தில்தான் இருக்கும்.

சட்டை ஊசியை நேராக்கி பிறகு தூண்டில் முள்ளு மாதிரி வளைத்தெடுத்தேன். ஊசியின் காதில் நைலான் நூலை இறுக்கமாக முடிந்தேன். இப்ப தூண்டிலில் எதைக் குத்திக் குளத்துக்குள் விடுவது? அதுக்குத்தான் பாவப்பட்ட மண்புழுக்கள் கிடைத்தன. ஈரமான தண்ணீர் வாய்க்கால்களில் தேடி எட்டுப் பத்து உயிருள்ள மண்புழுக்களைப் பிடித்தோம். முதலாவது மண்புழுவைத் தூண்டிலில் குத்தினேன். இப்ப தூண்டில் ரெடி. தூண்டில் கொளுக்கியைக் குளத்தில் வீசிவிட்டு, நைலான் நூலின் மற்றப் பக்கத்தை பூவரசங் கட்டையுடன் சேர்த்துப் பிடித்த் கொண்டேன்.

தூண்டிலை அங்குமிங்கும் அசைத்து மீன் ஏதாவது மாட்டுப்படுதா என்று முயற்சித்துக் கொண்டிருந்தேன். விக்கியின் லக்ஸ்பிறேப் பேணிக்குள் இதுக்கிடையில் இரண்டு பெரிய மீன்கள். என்னைப் பார்த்து ஒரு நக்கல் சிரிப்பு வேறு அடித்தான். மனதுக்குள் அவன் பிடித்த மீன்களைத் திருப்பிக் குளத்துக்குள் எறிந்தேன்.

ஒருமணித்தியாலம் கழிந்தும் எனக்கு ஒரு மீனும் பிடிபடவில்லை. ஆனால், "ம்ம் கும்" என்று ஒரு செருமல் பின்னுக்குக் கேட்டது. நான் மீன் பிடியில் பிஸி. "மாப்பிளே, மீன் என்ன விலை?" என்று பழகிய குரல். திரும்பிப் பார்த்தால் அப்பா! அடுத்து நடந்தது அநேகமாகக் கார்ட்டூன் படங்களில் மாத்திரம் பார்த்திருப்பீர்கள். அந்தக் கணம் அந்த இடத்திலிருந்து மறைந்து அடுத்த கணம் வீட்டில் நின்றேன். அவ்வளவு வேகமாக எந்த ஓட்டப் போட்டியிலும் ஓடியிருக்கவில்லை. விக்கி பிறகு அப்பாவின் சைக்கிளில் அவன் வீட்டுக்கு வந்ததாக அறிந்தேன்.

சொல்லாமல் கொள்ளாமல், களவாக, ஆளை மூழ்கடிக்கக் கூடிய குளத்தில் மீன் பிடித்ததிற்கு பூவரசங் கம்பு முறிய அடி விழப் போகுது என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால் அதுக்குப் பிறகு அப்பா "என் மீன்பிடித தொழிலைப்" பற்றி ஒருநாளும் கதைக்கவில்லை. கொஞ்சம் ஏச்சும் அடியும் தந்து அலுவலை அப்பவே முடித்திருந்தால் இதைவிடப் பரவாயில்லை என்றுதான் இப்பவும் நினைக்கிறேன்!
-------------------
பேணி = a tin can

தேங்காய்ச் சம்பல் - கிட்டத்தட்ட தேங்காய்ச் சட்னி மாதிரி ஒன்று, கொஞ்சம் உலர்வாக இருக்கும்

சட்டை ஊசி = safety pin

நைலோன் - Nylon

பூவரசங் கட்டை/பூவரசங் கம்பு - கிட்டத்தட்ட கட்டைவிரல் தடிப்பில் உள்ள பூவரசங் கிளையை வெட்டி, அதன் தோலைச் சீவி எறிந்துவிட்டு, ஒரு சாண் அளவான துண்டுகளாக்கி அதைக் காயவைத்தால், அவைதான் எங்கள் (பட்டம் விடும் நூலின்) நூல் கட்டைகள். இத்தக் கட்டைகளில் நைலோன் நூலை வடிவாகச் சுற்றி வைத்திருப்போம். ஒரு சில விற்பன்னர்கள் வெட்டிய பூவரசங் கட்டைகளை வெறுமனே வெயிலிற் காயவிடாமல், நெருப்பில் மெதுவாகச் சுட்டு (heat treatement !) அதை வலுவாக்குவார்கள்.

10 comments:

 1. அருமையான பதிவு.
  உங்கள் எழுத்து நடை அருமை.
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 2. Vice nice.....உப்பிடியும் fishing rod செய்யலாம் எண்டு தெரியாம , நான் போய் ரெண்டு fishing rod வாங்கிபோட்டன். ஸ்கூல் holiday இக்க parramatta ஆத்தில மீன் பிடிக்க ட்ரை பண்ணலாம் எண்டு இருக்கிறம் . முடிந்தால் வாங்கோ

  ReplyDelete
 3. வீட்டுக்குச் சாக்குப் போக்குக் காட்டி, நாங்கள் நீந்தப் போயிருக்கிறம், நீங்கள் மீன்பிடிக்கப் போயிருக்கிறீங்க.
  ரசித்தேன்.

  ReplyDelete
 4. அவ்வளவு வேகமாக எந்த ஓட்டப் போட்டியிலும் ஓடியிருக்கவில்லை //
  இப்படி நாங்களும் ஓடியிருக்கோமுல.

  ReplyDelete
 5. நன்றி @Rathnavel, கணேஷ், நிரூபன், & விசரன்.

  ReplyDelete
 6. சட்டையூசியில் செய்த முள்ளால் சத்தியமாக மீன் பிடிக்க முடியாது. ஆனலும் உங்கள் கற்பனையும் மொழியும் அழகாக உள்ளன. தொடர்ந்து கதை செய்யுங்கள். நன்றாக வரும்.பாராட்டுக்கள்.

  ReplyDelete
 7. நன்றிகள் Garunyan; என் கற்பனை இதில் புகுந்து விளையாடியது என்றாலும் நானும் என் நண்பர்களும் சட்டை ஊசியால் செய்த தூண்டிலால் மீன் பிடித்தது சத்தியமாக உண்மை.

  சிலவேளை, மிகப்பெரிய ஏரி அல்லது கடலில் அப்படிப் பிடிக்க முடியாதோ தெரியவில்லை. நான் முயற்சிக்கவில்லை :-)

  இதன் சூக்குமம், ஊசியைச் சரியான விதத்தில் வளைப்பதில் இருக்கிறது. கீழே பார்க்கவும். நாங்கள், pliers பாவிக்கவில்லை. ஆனால் மிகுந்த சிரமப்பட்டு சட்டையூசியை வளைத்தோம்.

  http://www.howtodothings.com/sports-recreation/how-to-make-fishing-lures-from-safety-pins

  ReplyDelete
 8. பழைய பதிவுன்னாலும் இப்பத்தான் பார்க்கிறேன், உங்கள் எழுத்துக்கள் வாசிக்க வாசிக்க சுகமாய் இருக்குங்க, எல்லாவற்றையும் படிச்சிட்டு வாரேன், தொடர்ந்து எழுதுங்க...........!

  ReplyDelete
 9. தொடர்ந்து எழுதுங்கோ

  ReplyDelete
 10. "கொஞ்சம் ஏச்சும் அடியும் தந்து அலுவலை அப்பவே முடித்திருந்தால் இதைவிடப் பரவாயில்லை என்றுதான் இப்பவும் நினைக்கிறேன்!"

  Yes. That's true

  ReplyDelete