Monday, August 29, 2011

செல்வச் சந்நிதி கோவில்

சந்நிதி கோவில் என்கின்ற "தொண்டைமானாறு செல்வச் சந்நிதி கோவில்" கொடியேற்றம் இன்றைக்குத்தான் என்று தற்செயலாக அறியவந்தேன். கடைசியாக எப்ப அங்கே போனேன் என்றால் ஞாபகம் வர மறுக்குது. 80களின் நடுவாக இருக்கும்.

"தொண்டைமானாறு வெளிக்கள நிலையம்" என்று ஒன்று ஒருகாலத்தில் இருந்தது. அது பெயருக்கு ஏற்ற மாதிரி தொண்டைமானாற்றில் இருந்தது. கீரிமலை வீதியும், (752 பஸ் ரூட்" ) பருத்தித்துறை வீதியும் சந்திக்கிற 'T-சந்தியில்' கடல் நீரேரிப் பக்கமாக இருந்த பச்சைக் நிறக் கட்டடத் தொகுப்புக்கள்தான் இவை. இந்த வெளிக்கள நிலையத்தில் இருந்துதான் முழு யாழ்ப்பாண பள்ளிக்கூடங்களுக்கும் கணக்கு, விஞ்ஞான ரெஸ்ட் பேப்பர்கள் வரும். கேள்விகள் கொஞ்சம் வயிற்றை கலக்க வைக்கிற மாதிரிக் கஷ்டமாக இருக்கும். இந்தப் பரீட்சைகளில் வரும் வினாக்களில் சிக்குப் பட்டுக் கொண்டிருக்கும்போது கட்டாயம் சந்நிதி முருகன் ஞாபகத்திற்கு வருவார். "முருகா முருகா" என்று ஒரு நேர்த்தி. பிறகு லோக்கல் இத்திக்கலட்டி வைரவரும் நினைவுக்கு வருவார். நமக்கேன் வம்பு என்று அவருக்கும் ஒரு நேர்த்தி. இரண்டு பேரும் மாறி மாறிக் ஹெல்ப் பண்ணினதால புள்ளடிக் கேள்விகளிற் கனக்கச் சரி வந்திருக்குது.

சந்நிதி கோவிற் திருவிழா தொடங்கினால் ஒரே ஒரே பிரச்சினைதான். வீட்டில் முட்டை, மீன், இறைச்சி அவிபட மாட்டாது. போனாப் போகுது என்று ஒரு முட்டைப் பொரியல் கூடக் கிடைக்காது. அப்பவெல்லாம் அச்சுவேலிக் கடைகளிற் மட்டன் ரோல்ஸ் களவாச் சாப்பிடத் தொடங்கவில்லை. சாப்பாடு 'சைவமாகி' இம்சை கொடுத்தாலும், திருவிழாத் தொடங்கினால் மிச்சம் எல்லாம் இனிமைதான். மண்ணிலாக் கொட்டை, சோளப் பொரியல், ஐஸ் கிறீம், அம்மம்மாக் குழல், காவடி, சிங்களவர்களின் பாய்/பெட்டிக் கடை, அலுமினியச் சட்டிக்கடை, "தலையில்லாமல் உடல் பேசுகிறது" வகைச் சுத்துமாத்துக்கள், போறவாற வழியில் வாற குஞ்சு குளுவான்கள், இளம் பெட்டைகள், பெடியங்கள், ஆச்சிமார், தாத்தாமார், 2-3 வயதுக் குழந்தைகளைக் 'குண்டு மாதிரிக் கனக்கிறான்/ள்' என்று பெருமையாச் சொல்லிக்கொண்டு காவிக்கொண்டு போகும் இளம் தம்பதிகள் என்று எல்லாமினிதே.

சின்ன வயதில் அப்பா, அம்மாவோடு சந்நிதி முருகன் போவில் போவேன். அநேகமாக கச்சான் சரையுடன் ஒரே ஒரு ஐஸ்கிறீம் தான் கிடைக்கும். இந்தப் பெரிய உண்மை அந்த்ச் சின்ன வயதிலேயே புரிந்ததால், கொஞ்சக் காலத்திலே தாத்தாவுடன் கோயில் போகத்தொடங்கினேன். தாத்தா வாங்கித்தரும் கடைசி ஐஸ்கிறீம் அவர் பணப்பை காலியாகும்போது. அதுக்கடுத்த ஐஸ்கிறீம் வீட்டில் தந்துவிட்ட காசில் நான் சொந்தமாக வாங்குவது! எனக்கு அடுத்தப் பிறந்த தம்பி கொஞ்சம் விபரமானவன். இந்தப் பெரிய திருவிழாக் கூட்டத்திலும் மற்றத் தாத்தாவைத் தேடிப்பிடிச்சு இன்னுமொரு ஐஸ்கிறீம் வாங்கிவிடுவான். "பக்கத்து இலைக்காரனுக்குக் கிடைத்த பாயாசம்" மாதிரி எனக்கும் இன்னொரு ஐஸ்கிறீம் கிடைக்கும்.

இன்னும் கொஞ்சம் வளர்ந்ததும் வாழ்க்கையில் ஐஸ்கிறீமை விட முக்கியமான சங்கதிகள் இருக்கு என்று புரிந்ததால், நண்பர்களுடன் கோவில் போகத்தொடங்கினேன். நடையிற் போனால் குறுக்கு வழிகளிற்தான் அதிகம் போவோம். வழியில் உள்ள குளம், குட்டை, கிணறு எதையும் எட்டிப் பார்க்காமற் போனதில்லை. அணில் கொந்தி விழுந்த நுங்குகளைக் கல்லிற் குத்தித் தின்னப் பார்த்திருகிறோம். வழியில் உள்ள அம்மன் கோவிலிற் சிதறு தேங்காய்களைப் பொறுக்கித் தின்போம். யாராவது புழுக்கொடியல் கொண்டு வந்த நாட்கள் இன்னும் உத்தமமானவை. புழுக்கொடியலும் தேங்காய்ச் சொட்டும் எச்சில் ஊறப் பண்ணும் ஒரு கொம்பினேசன்.

அம்மன் கோவிலுக்குக் கிட்ட 752 ரூட்டில ஏறிக் கொஞ்சத்தூரம் நடந்தால் புகழ்பெற்ற "காத்தாடி", ரோட்டுக்கரையில் வரும். இது ஏன் இருக்குது என்னத்துக்கு இருக்குது என்று எப்பவும் புரிந்ததில்லை. "கட பட" என்று பெருத்த சத்தத்துடன் சும்மா சுத்திக் கொண்டிருக்கும். முழியைப் பிரட்டி காத்தாடியை மேலே பார்ப்பது அரைக்காற்சட்டை வயதுப் பெடியளுக்குப் பிடிக்கும். பிறகு இன்னும் கொஞ்சம் நடந்தால் கீரிமலை ரோட்டு 752 ரூட்டைச் சந்திக்கும் முச்சந்தி வரும். சந்தியின் இடப்பக்கம் சைக்கிள் 'பார்க்கிங்'. திருவிழாக் காலங்களில் மட்டும் இருக்கும். சும்மா இல்லை, காசு கட்டி டிக்கட் எல்லாம் எடுக்கவேணும்.

நேரே வெளிக்கள நிலையத்தைக் கடந்து ரோட்டுக்கு வலப் பக்கம் இறங்கினால் - அது தற்காலிக பஸ் நிலையம். உடம்புக்கு முன்னும் பின்னும் "வைர மாளிகை" என்று எழுதிய அட்டைகளை ஒரு கவசம் மாதிரிப் போட்டுக் கொண்டு போதாக்குறைக்கு வசனங்களிலும் "உங்கள் நகைத் தேவைகளுக்கு -அணுகுங்கள் வைர மாளிகை" என்று விளம்பரம் செய்யும் பேர்வழியை இன்னும் மறக்கவில்லை. அவர் 2-in-1 மாதிரி பஸ் நம்பர்களையும் அறிவிப்பார். பின்னாட்களில் வந்த திருவிழாக்களில் ஆளைக் காணவில்லை. தொழிலை விட்டு விட்டார் போலும்.

பிறகு உடனே வருவது திருவிழாக்காலங்களில் மட்டும் கட்டப்படும் பாதசாரிகள் பாலம். அங்கை தொடங்கும் "அம்மா தாயே! பிச்சை போடுங்கோ" கோவில் வெளிவீதி வரை தொடரும். "அண்ணை கற்பூரம் வாங்குங்கோ" என்று ஒரு நாலைந்து "கால்நடை" விற்பனையாளர்கள் தங்கள் விற்பனைத் திறனைக் காட்டுவார்கள். வெளி வீதியில் பெரிய கடகங்களில் கச்சான், சோளப்பொரி விற்கும் ஆச்சிகள். பக்கத்தில் கிளிப்பு, சீப்பு, பேன்சீப்பு, கண்ணாடி, பொய்த்தலைமயில், பன்ஸ், அலிஸ்பான்ட் என்று அம்மா, அப்பாமாருடன் வாற இளம் பொம்பிளைப் பிள்ளகளை வரவைக்கும் கடைகள். அங்கே எங்களுக்கு என்ன வேலை? என்ன விக்கிறாங்கள் எண்டு பார்க்கத்தான்.

"செல்வச் சந்நிதி ஆலயமணியின் கோபுரம் 54 அடி உயரமுள்ளது. சந்நிதியானின் ஆலய கண்டாமணிதான் உலகிலுள்ள இந்து ஆலயங்களில் அதிக உயர் கோபுரத்தில் அமைந்ததாக் கூறப்படுகின்றது.இதைச்செய்து கொடுத்தவர் மானிப்பாய் அதிகார் செல்லமுத்துவின் மகனான சோமசுந்தரம். இந்த மணியின் நாதஓசை தொண்டமானாறு சந்நிதி முருகன் ஆலயத்திலிருந்து மானிப்பாய்க்கு கேட்குமாம்." இப்படி விக்கிபீடியாவில் உள்ள "செல்வச் சந்நிதி" சொல்லுது. "கேட்குமாம்" என்று சொல்லி விக்கிபீடியா எழுத்தாளர் தப்பப் பார்க்கிறார் என்று நினைகின்றேன். ஆனால் மணி நல்ல சத்தமான மணிதான். எங்களூர் வரை நிச்சயமாகக் கேட்கும். "மானிப்பாய்" வரை கேட்கும் என்பது "சொறி கொஞ்சம் ஓவர்" . கற்பனைத்திறன் உள்ளவர்களுக்கு மட்டும் கேட்டிருக்கலாம். மணியை  விட "டங்" என்று ஞாபகத்தில் நிற்பது லவுட் ஸ்பீக்கரில் எப்போதும் கேட்கும் டி. எம். சௌந்தரராஜனின் "ம‌ண்ணானாலும் திருச்செந்தூரில் ம‌ண்ணாவேன்", சொல்லாத நாளில்லை சுடர்மிகு வடிவேலா போன்றன. சௌந்தரராஜனின் இசைத்தட்டு ஓய்வெடுக்கும்போது, " குன்றத்திலே குமரனுக்குக் கொண்டாட்டம் " என்று ரமணியம்மா பாடிக்கொண்டிருப்பா. கடைசிப் பாட்டுத் துள்ளிசை என்பது என் தாழ்மையான அபிப்பிராயம்.

**********************

கோயிலுக்கு மேற்குப்பக்கமாக ஒரு கேணி. எத்தனைபேர் குளித்தாலும் எல்லாற்றை பாவங்களையும் கழுவும் என்று ஒரு நம்பிக்கை. நிறையப் பேர் முயற்சித்தார்கள். எனக்கும் நண்பர்களுக்கும் வீட்டுக் கிணறுகள் அதே வேலையை இன்னும் "க்ளீனாகச்' செய்யும் என்று நம்பிக்கை என்பதால் வீட்டிலேயே குளித்துவிட்டு வந்துவிடுவோம். அதுதவிர கேணிக்குள் இறங்க மனத்திடம், நோய் எதிர்ப்புசக்தி எல்லாம் உச்சத்தில் இருக்கவேண்டும். கோயிலின் மேற்குப் பக்கம் தவிர்த்து எல்லாப் பக்கங்களும் மரங்கள். (மேற்குப்பக்கம் கோயில் வீதியைத் தாண்டினால் கடல்.)

கோயிலுக்குக் உள்ளே போனால், எல்லாக் கடவுளருக்கும் முன்னால் கற்பூரம் எரிக்கும் இரும்புக் கால்வைத்த பாத்திரம் ஒன்றிருக்கும். வாங்கிய கற்பூரத்தைத் தட்டுத் தட்டாகப் பிரித்து, ஒவ்வொரு கற்பூரப் பாத்திரத்தில் எறிந்தால் ஏதோ வந்த வேலை முடிந்தமாதிரி. உள்வீதியை ஒரு சுத்துச் சுத்தினாற் போதும். ஆனால் சிலவேளை 2, 3 முறையும் சுத்த வேண்டியும் வரலாம். அதுக்குக் காரணம், 2 வது பந்தியில் வந்த நேர்த்திக்கடன் சிலவேளைகள்தான். பிறகு வெளியே வந்தால், வழக்கமான ஐஸ்கிறீம், கச்சான் அது இது என்று வாங்கிக் கொறிப்போம். தும்பு முட்டாஸ், கலர்த் தண்ணி (சர்பத்?), சோக் கட்டி மாதிரி ஆனால், ஒரு குங்குமம்/இளம் சிவப்பு நிறத்தில் இருக்கும் இனிப்பு என்பனவற்றைப் பார்ப்பதோடு சரி. சிலவேளை தும்புமுட்டாஸ் வாங்கியுண்டு வயித்துக்குத்தையும் இலவசமாக வாங்கியதுண்டு.

**********************

1986இல் என்ன மாதம் என்று ஞாபகம் இல்லை. ஆனால் குண்டுச் சத்தங்கள் கேட்ட ஒருநாள். அப்போதுகூடக் குண்டுச் சத்தங்கள் புதினம் இல்லை. வானத்தில் விமானங்கள், ஹெலிகள் வட்டமிட்டன. இம்முறை குண்டுச் சத்தம் கேட்டபக்கம் மாத்திரம் வித்தியாசம். தொண்டமானாற்றறுப் பக்கம் குண்டுச்சத்தங்கள் கேட்டன. (தொண்டைமானாறு ) வெளிக்கள நிலையத்தில் ஆமிக் காம்ப் இருந்தது. அடுத்தநாட்தான் தெரிந்தது, வெள்ளோட்டம் விட்டுச் சில வருடங்களேயான, உலகத்தின் நான்காவது பெரிய சித்திரத் தேர் என்று சொல்லப்பட்ட, இலங்கைத் தமிழரின் ஆர்வம், சேர்ந்துசேர்த்த செல்வம் ஆகியவற்றோடு, இந்தியாவில் இருந்து வந்த சிற்பிகள் வருடங்களாக உழைத்துச் செய்த தேர் எறிகணை வீச்சால் எரிந்துவிட்டது என்று. பிறகு புதுத்தேர் செய்யப்பட்டதாக்க் கேள்விப்பட்டதோடு சரி. போகக்கிடைக்கவில்லை.

என்னதான் அப்பப்ப மூக்கைப் பொத்த வைத்தாலும், கோவில் வெளிவீதியில் ஏதோ ஒரு மருத மரத்தின் வேரில் குந்தி இருந்து கொண்டு , கச்சானைக் கொறித்துக்கொண்டு வம்பு தும்பு பேசுவதின் இன்பம், ஏதோ ஒரு வேற்று நாட்டின் கடற்கரையோர விடுதியில் வெள்ளைப் பெயின்ற் அடித்த கதிரையில் படுத்துக் கொண்டிருந்து கடலையும் வானையும் வெறிக்கும்போது வருவதில்லை. எனக்கும் எதாவது ஒரு திருவிழா நாளில் முக்கால் காற்சட்டை + பெரிய பூப்போட்ட சட்டையுடன், கூலிங் கிளாசை உச்சந்தலையில் போட்டுக்கொண்டு விலைகூடிய SLR கமராவால் மோசமான போட்டோக்கள் எடுத்து முகநூலிற் போட ஆசை. அடுத்தடுத்த வருடங்களில் அது நடக்க சந்நிதி முருகன் அருள் பாலிப்பாராக.--------------------

கச்சான், மண்ணிலாக் கொட்டை = வேர்க்கடலை (தமிழ்நாடு)
சரை - பொட்டலம்
கனக்க - நிறைய
கதிரை - நாற்காலி, அல்லது சேரு (தமிழ்நாடு)
சோக் கட்டி- chalk piece

படங்கள் : http://www.thinakaran.lk/2009/09/03/_art.asp?fn=d0909035 இலிருந்து

குறிப்பு: இதை எழுதத் தொடங்கியது, ஓகஸ்ட் 29, 2011. முடித்தது செப்ரம்பர் 3, 2011.

20 comments:

 1. //"தொண்டைமானாறு வெளிக்கள நிலையம்" என்று ஒன்று ஒருகாலத்தில் இருந்தது.//
  நமக்கெல்லாம் எச்சாம் எண்டா தான் அவங்கட ஞாபகம் வரும்!!ஹிஹி

  ReplyDelete
 2. //செல்வச் சந்நிதி ஆலயமணியின் கோபுரம் 54 அடி உயரமுள்ளது. சந்நிதியானின் ஆலய கண்டாமணிதான் உலகிலுள்ள இந்து ஆலயங்களில் அதிக உயர் கோபுரத்தில் அமைந்ததாக் கூறப்படுகின்றது.இதைச்செய்து கொடுத்தவர் மானிப்பாய் அதிகார் செல்லமுத்துவின் மகனான சோமசுந்தரம். இந்த மணியின் நாதஓசை தொண்டமானாறு சந்நிதி முருகன் ஆலயத்திலிருந்து மானிப்பாய்க்கு கேட்குமாம்.//

  அப்பிடியா??புதிய தகவல்~பெருமை தானே!

  ReplyDelete
 3. அருமையான அனுபவ பகிர்வு அண்ணே!

  ReplyDelete
 4. தொண்டைமானாறு செல்வச் சந்நிதி கோவிலுக்கு நானும் போயிருக்கிறன். திருவிழா எண்டாலே கொண்டாட்டம் தான். ஆனா சைவ சாப்பாடு பெரிய பிரச்சினைதான். ஊர் கோவிலுக்கு மட்டுமில்லை, நல்லூர், கதிர்காமம்,செல்வச் சந்நிதி, நயினா தீவு எண்டு திருவிழா சீசனே சைவம் தான்.

  புழுக்கொடியலும் தேங்காய்ச் சொட்டும் எச்சில் ஊறப் பண்ணும் ஒரு கொம்பினேசன்.

  அதை இப்ப நினைத்தாலும் வாய் ஊரும்.

  ReplyDelete
 5. தொண்டைமானாறு காற்றாடித்திட்டம் பிரிட்டிஸ் காலத்தில் போடப்பட்டது.உவர்நீராகிய ஆற்றை,நன்னீராக மாற்றும் திட்டத்தின் ஒரு பகுதியே ஆகும்.கோடைகாலத்தில் ஆற்றில் உள்ள நீரை தெருவின் மேற்குபக்கத்தில் உள்ள தரையில் விடுவதற்கு காற்றாடி கட்டப்பட்டது [காற்றுவலு நீர் இயந்திரம்]
  இலங்கை அரசாங்கங்களால் இத்திட்டம் கவனிப்பாரற்று விடப்பட்டது.
  திட்டம் நடந்தேறிஇருந்தால் ஆறு நன்னீராக மாறி இருக்கும். பல்ஆயிரம்
  ஏக்கர் நிலம் விவசாயநிலமாக மாறி இருக்கும்.

  ReplyDelete
  Replies
  1. நல்ல தகவல்! அந்த ஏரியாவ சுத்தித்திரிஞ்ச நமக்குத்தெரியாமைப்போச்சே!!

   Delete
 6. நல்ல பதிவு.
  அழகு தமிழ்.
  வாழ்த்துக்கள்.
  http://rathnavel-natarajan.blogspot.com/2011/08/blog-post_29.html

  ReplyDelete
 7. "தொண்டைமானாறு வெளிக்கள நிலையம்" என்று ஒன்று ஒருகாலத்தில் இருந்தது.//

  வணக்கம் அண்ணாச்சி,
  உங்களுக்குப் Field Center கூட நினைவில் இருக்கிறதே..
  ஊர் நினைவுகளை என்றும் மறக்காமல் பத்திரப்படுத்தி வைத்திருக்கிறீங்க.

  ReplyDelete
 8. ஊர் நினைவுகளை மண் மணங்க கமழும் வார்த்தைப் பகிர்வுகளோடு அழகாகப் பதிவிட்டிருக்கிறீங்க.

  ReplyDelete
 9. சந்நிதியானின் அன்னதான மடங்கள் பற்றியும் கொஞ்சம் அலசியிருக்கலாமே,
  அதுக்கென்று தனிப்பதிவே போடலாம் அல்லவா.

  ReplyDelete
  Replies
  1. உண்மைதான்... அதுவும் நீங்கள் 80 காலத்தவர் என்றால்... பல மடங்கள் இருந்திருக்க வேண்டும்... நம் காலத்தில் ஒன்றே ஒன்றுதான்.

   Delete
 10. சக்திவேல்...!

  நீங்கள் சந்நிதிக்கு இறுதியாகச் சென்ற 80களின் நடுப்பகுதியிலேயே நான் பிறந்தேன் என்பதைச் சொல்லிக்கொண்டு, அப்பாவின் கைபிடித்து சந்நிதி ஏரியில் (கடல்) நீராடிய ஞாபகம் இன்னும் இருக்கிறது.

  இறுதியாக 2005இல் வேட்டியுடன் சூரன் போருக்கு போனதாக ஞாபகம். சமயங்கள் மீதான நம்பிக்கையில்லை என்றாலும், சந்நிதிக்கு செல்வது எனக்கு என்றைக்குமே பிடித்தமானது.

  மிகவும் சுவைசொட்டும் யாழ்ப்பாணத்தமிழில் எழுதியிருக்கிறீர்கள்.

  ReplyDelete
 11. நன்றிகள் மைந்தன் சிவா, கணேஷ், Somas, Rathnavel, நிரூபன், & மருதமூரான்.

  @நிரூபன், ஒத்துக்கொள்கின்றேன். பிரச்சினை என்னவென்றால், நான் ஒருதடவைகூட சந்நிதி மடம் எதிலும் சாப்பிடவில்லை. வீட்டில் சாப்பிட வசதியுள்ளவர்கள் அங்கு ஏன் போட்டியிடவேண்டும் என்றமாதிரி ஒரு கருத்து இருந்தது. (தப்பாகக் கூட இருக்கலாம்).

  @மருதமூரான்- சமயங்களில் உள்ள நம்பிக்கைகளை நான் இழந்து நிறைய நாளாயிற்று. கடவுள் நம்பிக்கை மட்டும் on/off என்று மாறி மாறி வருகிறது. இப்பதிவு சேமிக்கப்பட்ட என் ஞாபகங்களைப் பகிரும் ஒரு சிறு முயற்சி மட்டுமே :-)

  ReplyDelete
 12. நல்ல அலசல். நாங்களும் ஃபீல்ட் வொர்க் சென்டர் என்று சொல்லப்படும் தொண்டமானாறு வெளிக்கள எக்ஸாம்தான் ஒவ்வொரு முறையும் எழுதுறது. ஆனா நாங்க அறிஞ்ச காலம் முதல் தொண்டமனாரில் அதை கண்டதே இல்லை சிறு வயது முதலே நண்பர்களுடன் அதிக தடவை சென்ற இடம் சன்னதிதான் அங்க போய் ஆற்றில குளிச்சு பிறகு முருகனை சந்திச்சு பிறகு மடத்தில போய் சாப்பிட்டு வாறதே ஒரு சுவை.நேற்றும் சன்னதி சென்று அடியார் மடமும் சென்று பந்தி வச்சுதான் இன்று கொழும்பு வந்தேன்.தேர் அதன்பிறகு ஒன்று செய்து ஒரு முறை வலம் வரும்போது தேர் முறிந்தது கண்ணுக்குள் இருக்கிறது ஏனெனில் சாரணர் கடமையில் இருந்தேன். அதன் பிறகு புதிய சித்திர தேர் கடந்த இருவருடமாக ஓடுகிறது.

  ReplyDelete
 13. அனுபவப் பகிர்வுக்கு நன்றி M.Shanmugan . FWC (வெளிக்கள நிலையம்) இல்தான் ஒரு ஆமிக்காம்ப் 1984 (ஒரு ஞாபகத்தில் எழுதுகிறேன், வருடம் முன் பின்னாக இருக்கலாம்)இல் போடப்பட்டது. அதுக்குப் பிறகு அது வெறும் ஆமிக் காம்ப்தான். FWC வேறு இடத்தில் இருந்து இயங்கியது. FWC இல் தயாரித்த ரெஸ்ட் கேள்விகள் கஷ்டமாக இருந்தாலும் அவை 'புதுமையானவை' . மாணவர்கள் சிந்திப்பதை ஊக்குவித்தன என்பது என் அபிப்பிராயம்.

  ReplyDelete
 14. ஆமாம் அந்த கேள்விகள்தான் மானவர்களுக்கு சிறந்தது. அதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

  ReplyDelete
 15. நன்றீங்க இப்பத் தான் நான் கவனித்தேன்...

  பல சுவாரசியமான தகவல்கள்..

  அடுத்த திருவிழாவிற்கு நான் எழுதப் போகும் பதிவில் இதுவும் இடம்பெறும் நன்றி ஐயா...

  ReplyDelete
 16. "தொண்டைமானாறு வெளிக்கள நிலையம்" என்று ஒன்று ஒருகாலத்தில் இருந்தது.//
  ஒருகாலத்தில் அல்ல அது இப்போதும் உள்ளது. போர் காரணமாக அது யாழ்ப்பாணத்தில் இயங்கியது. அது மீண்டும் தொண்டைமானாற்றில் கட்டப்பட உள்ளதாக அண்மையில் ஒரு இணையத்தளத்தில் படித்ததாக ஞாபகம்.....
  கண்டு பிடித்து விட்டேன்
  http://www.valvaicouncil.com/the-news/34-bottom-news/77-thondaimanaru-rc

  ReplyDelete
 17. சந்நிதியானின் தேர் குண்டு வீச்சில் எரிய வில்லை சில ராணுவவீரர்கள் நெருப்புவைத்தார்கள் என்பதுதான் உண்மை என்று நினைக்கிறேன்.

  ReplyDelete
 18. சுவையான மீட்டல்!

  ReplyDelete