Sunday, October 9, 2011

'அன்னக்கிளி' யும் அது கொண்டுவரும் ஞாபகங்களும்...

Nostalgia என்ற ஆங்கிலச் சொல்லுக்குத் தமிழில் சரியாக என்ன சொல் வரும் என்று தெரியவில்லை. 'நனவிடை தோய்தல்' என்பது ஞாகத்திற்கு வருகிறது. ஆனால் மிகச் சரியான அர்த்தமா இல்லை இரண்டும் சற்று வித்தியாசமா என்று குழப்பமாகவுள்ளது. Nostalgia என்பது இறந்த காலத்தை ஒருவித ஏக்கத்துடன் நினைவு படுத்துக் கொள்வது. இதில் முக்கியமானது இறந்த காலத்தில் உள்ள நல்லதுகளை மட்டும் நினைத்துப் பார்ப்போம். உதாரணமாக, "நான் சின்னப்பிள்ளையாக இருக்கேக்கை பாண் ஒரு றாத்தல் 60 சதம்தான்" என்று ஞாகத்தில் உள்ளது. அப்ப ஒரு குடும்பத்தின் சராசரி வருமானம் என்பது சௌகரியமாக மறந்துவிடும்.

வெள்ளெழுத்துக் கண்ணாடி போட்டாப்பிறகும் அரைக்காற்சட்டையுடன் பள்ளிக்கூட ஞாபகம் வருவதும் அதோடு ஒட்டிக்கொண்டு ஒரு மெல்லிய ஏக்கம் வருவதும் தவிர்க்க முடியாமல் வருவதற்கும் காரணம் இந்த 'நனவிடை தோய்தல்' தான். இந்த 'ஏக்கம்' சென்ரிமென்ற்'இற்குக் காரணம் சுமைகளற்ற சிறுவயது மென் ஞாபகங்கள் அவை என்பது மட்டுமல்ல. என்னதான் தலைகீழாக நின்றாலும் அந்தக்காலம் திரும்பி வரப்போவதில்லை என்ற புரிதல்தான் முக்கிய காரணம் என நினைக்கின்றேன்.சிலவற்றைக் காணும்போது அல்லது கேட்கும்போது இந்தப் பின்னோக்கிப் போகும் நினைவுகள் அதிகம் வரும். கொஞ்சம் பழைய தூசி பிடித்த பெட்டி ஒன்றைத் திறந்தபோது அதுக்குள் இருந்த ஆறாம் வகுப்பு 'றிப்போர்ட்'ஐக் காணும்போது கூடவே வருபவை ஞாபகங்கள். ஆறாம் வகுப்பில்தான் நட்ராஜ் அல்லது ஒக்ஸ்போர்ட் கொம்பாஸ் பெட்டி வாங்கியிருப்போம். விஞ்ஞானம், தமிழ், சமூகக்கல்வி என்று பாடங்கள் தனித்தனியாய்ப் பிரிந்து ஒவ்வொரு பாடத்திற்கும் தனித்தனி வாத்தியா(ய)ர் வந்திருப்பார். சிலபேர் அப்பதான் களிப்பேனை பாவிக்கத்தொடங்கியிருப்போம். சின்னப் பள்ளிக்கூடத்திலிருந்து பெரிய பள்ளிக்கூடத்திற்கு வந்த 'மிதப்பு'க் கொஞ்சம் மீந்திருக்கும். 'ஏ/எல் படிக்கிற அண்ணாமார் அக்காமார் படிப்பு விடயமாக (!) டிஸ்கஸ் பண்ணுவதைக் கவனிக்கத் தொடங்கியிருப்போம்.

அன்னக்கிளி படம் வந்தது 1976 இல். முதலாம் வகுப்புக் படித்துக்கொண்டிருந்திருப்பேன். படத்தைப் பார்த்ததில்லை. ஆனால் இந்தப் பாட்டு என் அரைக்காற்சட்டைப் பருவம் முழுவதுமே என்னோடு கூட வந்தது. கோயிற் திருவிழா, சித்திரை வருஷப் பிறப்பு விளையாட்டுப்போட்டி, 'மின்னோளியிற்' கரப்பந்தாட்டச் சுற்றுப்போட்டி, ஐஸ்கிறீம் வான் என்று லவுட் ஸ்பீக்கர் இருக்கும் இடமெல்லாம் இந்தப் பாட்டுத் தப்பாது. இப்ப இந்தப் பாட்டைக் கேட்டால் கூடவே வருபவை ஒரு கலவை ஞாபகங்கள். ஏதோ ஒரு வைரவ கோயிற் திருவிழாவில் சோளப்பொரி கொறித்துக்கொண்டு இரவு எந்த மேளக்குழுக்கள் வருது, கண்ணன் கோஷ்டி பாட்டுப் பாட வருதா? போன்ற 'முக்கியமான' தகவல்களைச் சேர்த்துக் கொண்டிருப்பேன். அல்லது இவற்றைக் கொஞ்சக் கைச்சரக்குச் சேர்த்து இன்னொருவனுக்கு அவித்துக் கொண்டிருப்பேன். கோயிற்திருவிழாக்கள் தொடங்கினால் நாலைந்து மேளக் கோஷ்டிகள் இருக்கும், அநேகமாக இரவில்தான் இருக்கும். எங்களைப் போன்ற அரைக்காற்சட்டைகளுக்கு மேளக்காரர்களுக்குக் கிட்ட, முன்வரிசையில் இருந்து பார்க்கத்தான் ஆசை. மேளத்தைப் பார்ப்பதைவிட மேளக்காரரின் அங்க சேஷ்டைகளைத்தான் பார்த்து ரசிப்போம். இல்லாவிட்டால் 'ஆர் மேளத்தை உடைக்கிறமாதிரிக்' கெட்டித்தனமாக அடிக்கிறான்' என்பதிற்தான் நிறைய 'விவாதங்கள்' வரும்.


கோயில் இரவுத் திருவிழா என்றால் கலர் ரியூப் லைற், 'விட்டு விட்டு' எரியும் பல்ப் அலங்காரம் என்று கோயிலே ஒரு கலாதியாக இருக்கும். மத்தியான நேரத்திற்குப் பின் எந்நேரமும் 'லைற் மிசின்காரன்' வரலாம். எல்லாவற்றையும்விடத் 'திறிலான' விஷயம் லைற்று மிசினைச் 'ஸ்ரார்ட்' பண்ணுவது. 'பொழுதுபட்டுக்' கொஞ்சம் இருட்டத் தொடங்க ஆயத்தமாவார்கள். குட்டி ராட்சதன்மாதிரி இருக்கும் லைற் மிசினிற்குக் கற்பூரம் (சூடம்) காட்டி விட்டுப் பயபக்தியோடு இரண்டு 'பெலமான' ஆசாமிகள் ஒரு "ஸ்ரார்டிங் லீவர்' ஐத், தம் பிடித்துச் சுத்துவார்கள். ஒன்று, இரண்டு, மூன்று,..., என்று சுற்ற, 'டட், .. டட், .. டட், டட் டட்' என்று 'ஸ்ரார்ட்' ஆகும். பிறகு விடிய வெளிச்சம் வரும் மட்டும் இதன் இயந்திரச் சத்தம் எட்டுப் பத்து வீடுகளுக்காவது கேட்கும்.

சிவராத்திரி அநேகம் ஊர்களில் கோவில்களிற்தான் கொண்டாடப்படும் . எங்களூரில் மட்டும் சிவராத்திரிக்குக் கோவில்களில் சனம் மினக்கெடுகிறமாதிரி ஞாபகம் இல்லை அன்றைக்குப் பள்ளிக்கூடத்தில் மேடையில் இரவிரவாக பாட்டு/நாடகம் போடுப்படும். அநேகமாகக் கிட்டத்தட்ட விடியும் மட்டும் ஏதாவது நிகழ்ச்சி இருக்கும். தொடக்கத்தில் 'இப்போது நான்காம் வகுப்பு மாணவி தர்சினி ஒரு பாட்டுப் பாடுவார்" என்று அறிவிக்க, அவா கொஞ்சம் வெட்கப்பட்டுக்கொண்டு "சின்னப் பாப்பா எங்கள் தங்கப் பாப்பா, சொன்ன சொல்லைக் கேட்டால்தான் நல்ல பாப்பா..." என்ற மாதிரி ஒரு பாட்டைப் பாடுவா. இப்படியே போய் ஏ/எல் அண்ணாமார் நாடகம் போட நடு இரவு தாண்டிவிடும். அவர்களின் நாடகம் நிறைப்பேருக்குப் பிடிக்கும். காதல், நகைச்சுவை என்று கலந்து வெளுத்துவாங்குவார்கள்!

நாடகம் கிட்டத்தட்ட இப்படித்தான் இருக்கும். நீளத் தலைமயிர் வளர்த்து, பெல்பொட்டம் போட்ட இளைஞன். கொஞ்சம் 'பாதுகாப்பான' இடைவெளி விட்டு ஒரு சிவந்த இளம்பெண் நிற்பாள். இது முதல் சீன்.

"சுகந்தி, நான் உன்னை எவ்வளவு ஆழமாக நேசிக்கிறேன். உன் இதயம் என்ன கல்லா? நீ ஏன் இப்படி என்னை நோகடிக்கிறாய்?...", சுகந்தி அநேகமாக ஆராவது கொஞ்சம் சிவந்த பெடியன் 'பேமாஷார்ப்' பிளேட்டின் துணையால் மீசையிழந்து, பொய்முடி கட்டி, கஷ்டப்பட்டுச் சேலையும் கட்டி இருப்பான். சுகந்தி கோபப்பட்டுக் கொண்டு, "சேகர், உனக்கு இந்த வயதிற் காதல் தேவையா? உன் அப்பா/அம்மா உன் படிப்புக்கு எவ்வளவு செலவழிக்கிறார்கள் தெரியுமா? அதை யோசித்துப் பார்த்தாயா?" என்று காரைக்காலம்மையார் ரேஞ்'சிற்கு அட்வைஸ் மழை பொழிவாள். இப்படிக் காதல் வசனம்- அட்வைஸ் என்று நாடகம் ஒரு பத்து நிமிசம் ஓடும்.

அடுத்த காட்சி. ஒரு முரட்டு இளைஞன். சாரம் தான் கட்டி இருப்பான்.(அந்தக் காலங்களில் நாடகங்களில் வரும் முரடர்கள் சாரம்தான் கட்டியிருப்பார்கள்). கோபமாகக் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருக்கிறான். இவன்தான் சுகந்தியின் அண்ணா என்று இவ்வளவுக்குள் புரிந்திருக்கும்...

மிச்ச நாடகம் எப்படிப் போகும் என்று ஊகிக்க முடியாவிட்டால் நான் எழுதப்போகும் "காதல் என்பது கானல் நீரா?" மேடை நாடகத்திற்காகக் காத்திருக்கவும்.

எங்கள் வகுப்புப் பெடியளும் ஒருதரம் நாடகமொன்று போட்டார்கள். அது ஒரு 'ப.ய.ங்.க.ர.த் திகில் துப்பறியும் நாடகம்'. அப்படித்தான் நிகழ்ச்சி தொடங்கமுதல் அறிவிப்பாளர் அடிக்கடி ஞாபகமூட்டினார். கதை/வசனம்/நெறியாள்கை/நடிப்பு எல்லாம் வகுப்பு 7 பி மாணவர்கள். நேரம் கிடைக்கும்போது அதைப்பற்றி எழுதுகிறேன்.--------------------------------------------------------------------------------------------
மிக முக்கியம்: பெயர்கள் யாவும் கற்பனையே.


பாண் - ப்ரெட் (தமிழ்நாடு)
லைற்று மிசின் -a diesel generator fixed permanently onto the body of a small lorry/truck
பொழுதுபட்ட நேரம் - சாயுங்காலம் (தமிழ்நாடு)
சாரம் - சாரம் (இலங்கை, தமிழ்நாட்டில் சில பாகங்கள் ( உ+ம் திருநெல்வேலி), லுங்கி/கைலி (சென்னை)
ஏ/எல்- A/L = Advanced Level, கிட்டத்தட்ட (இந்தியாவில்) ப்ளஸ் 2 மாதிரி

நன்றிகள்:
(1) புகைப்படம்: www.idaikkadu.com

20 comments:

 1. நல்ல அருமையான பகிர்வு

  நம்ம சைட்டுக்கும் கொஞ்சம் வாங்க

  ReplyDelete
 2. சாயங்காலம் இல்லை. சாயும்காலம், அதாவது சூரியன் சாயும் காலம், மாலை நேரம்.

  ReplyDelete
 3. "நனவிடை தோய்தல் " அழகு ..உங்கள் பகிர்வும் அப்படியே ..

  ReplyDelete
 4. நன்றிகள் வைரை சதிஷ், பூங்குழலி, மற்றும் அனானி.

  @Anonymous
  திருத்திவிட்டேன்.

  ReplyDelete
 5. அருமை...

  ReplyDelete
 6. "என்னதான் தலைகீழாக நின்றாலும் அந்தக்காலம் திரும்பி வரப்போவதில்லை ..."
  உங்கள் நனவிடை தோய்தலில் எங்களையும் எங்கள் நனவிடைகளில் தோய வைக்கிறீர்கள்

  ReplyDelete
 7. நன்றிகள் ரெவெரி & Dr.எம்.கே.முருகானந்தன்.

  ReplyDelete
 8. Nostalgia=வீட்டு நினைவால் ஏற்படும் துயரம்

  ReplyDelete
 9. //
  'நனவிடை தோய்தல்' என்பது ஞாகத்திற்கு வருகிறது. ஆனால் மிகச் சரியான அர்த்தமா இல்லை இரண்டும் சற்று வித்தியாசமா என்று குழப்பமாகவுள்ளது
  //
  எனக்கும்தான்

  ReplyDelete
 10. கருத்துரைகளுக்கு நன்றி, @என் ராஜபாட்டை"- ராஜா

  ReplyDelete
 11. எங்கள் வகுப்புப் பெடியளும் ஒருதரம் நாடகமொன்று போட்டார்கள். அது ஒரு 'பயங்கரத் திகில் துப்பறியும் கதை'. அப்படித்தான் நாடகம் தொடங்கமுதல் அறிவிப்பாளர் அடிக்கடி ஞாபகமூட்டினார்/

  நனவிடைத்தோய வைத்த அருமையான பகிர்வு. பாராட்டுக்கள்..

  ReplyDelete
 12. நல்ல பதிவு.
  மனப்பூர்வ வாழ்த்துக்கள்.
  http://rathnavel-natarajan.blogspot.com/2011/10/blog-post_30.html

  ReplyDelete
 13. 'நனவிடை தோய்தல்' மாத்திரமே செய்யும் நிலைக்கு போய் விட்டோம் ... உங்கள் எழுத்து புதியவன் எனக்கு ஊக்கம் அளிக்கிறது ... வாழ்த்துக்கள்

  ReplyDelete
 14. Nostalgia - வீட்டுப் பிரிவு நோய்

  www.Eudict.com

  This has reasonable translations.


  நனவிடை தோய்தல் - Should be old memories ( Again i could not get the perfect english word)

  Nitku

  ReplyDelete
 15. நனவிடை தோய்தல் - Reminiscences ஆக இருக்கலாம்.

  ஆங்கிலத்திலும் தமிழிலும் மூன்றாம் வகுப்பில் 100/100 எடுத்தவர்கள் இருந்தால் உறுதிப்படுத்தலாம். என்னால் முடிந்தமட்டில் ஒரு தேங்காய் அன்பளிப்பாக தரலாம்.ஒரு மாதம் பொறுத்திருக்க வேணும் (ஏன் என்றால், இப்ப இலங்கையில தேங்காய் இறக்குமதி செய்யுறதால நல்ல விலை). இப்பத்தைய பெடியலுட்ட இலங்கையின் பிரதான உற்பத்திகள் தேயிலை, இறப்பர் தென்னை என்றால், மாமா பள்ளிகூட பக்கம் போகவில்லை என்டு சிரிக்குறாங்கள்.

  Nitku

  ReplyDelete
 16. @Nitku

  (1) From dictionary.com

  I used meaning '1'. But yes what you says is also correct in 3 below.

  World English Dictionary
  nostalgia (nɒˈstældʒə, -dʒɪə)

  — n
  1. a yearning for the return of past circumstances, events, etc
  2. the evocation of this emotion, as in a book, film, etc
  3. longing for home or family; homesickness

  [C18: New Latin (translation of German Heimweh homesickness), from Greek nostos a return home + -algia ]

  (2)http://en.wikipedia.org/wiki/Nostalgia

  Probably it started with a meaning of 'homesickness', but it evolved to mean '(wistful) yearning of the past'.

  Reminiscences- Seems ok, but can it be just "நினைவுகள்?"

  Where is the guy who was teaching English to English training college teachers? Now my memories go towards the English Teachers' College that was behind Akbar hall(Penideniya)!

  ReplyDelete
 17. Thanks for the long clarification. Does Reminiscences mean sweet old memories? Are you referring to the guy in UK?

  Nitku

  ReplyDelete
 18. ஓம் பருத்தித் துறை வீதியில் தான் கோப்பாய் வாகிகசாலைக்கு அருகில் நாவலர் பாடசாலை. நனவிடைத் தோய்தல் மிக நன்றாக உள்ளது. வாழ்த்துகள் சகோதரா. சும்மா கிளிக்கி வாசித்தேன்.
  வேதா. இலங்காதிலகம்.
  http://kovaikkavi.wordpress.com

  ReplyDelete