Wednesday, June 13, 2012

சின்னாம்பி

சின்னாம்பியைப் பற்றிச் சொல்லமுன், என்னைப் பற்றிச் சொல்லவேண்டும். நான் ஒரு சாதாரண பதிவன். காலை 8 மணிக்கு ஒரு பதிவு போட்டுவிட்டு 8:00:02 இலிருந்து யாராவது புண்ணியவான் 'கொமென்ட்' போடுகிறானா என்று பார்க்கத் தொடங்கும் சாதாரண பதிவன். இரண்டு மூன்று 'அப்பாவிகள்' தொடர்ந்து 'கொமென்ட்' போடுகிறார்கள். அவர்கள் சீரும் சிறப்பும் பெற்றுப் பல்லாண்டு வாழ்க. எனக்கு ஒரு சின்னப் பிரச்சினை 'தலைப்பு'ப் போட்டால் அதைப்பற்றி எழுதாமல் என்னவோ எல்லாம் எழுதுவேன். எனது பெறாமகள் ஒருத்தி 4ம் வகுப்புப் படிக்கிறாள். தமிழ்ப்பாடத்தில் 'ஆடு' என்று தலைப்புப் போட்டு "எங்கள் வீட்டிலுள்ள ஆடு வேப்பங்குழை சாப்பிடும்" என்று தொடங்கி நிறைய எழுதி '...இப்படி சவர்க்காரத்திற்குப் பல பயன்பாடுகள் உண்டு' என்று முடித்தாள். இப்பதானே எல்லாம் ஜீன்ஸ், ஜெனிடிக் என்று ஆராயிறாங்கள். அதொன்றுதான் பரம்பரையிலே ஒடுதுபோல.

சரி, நான் சொல்லப்போற விஷயம் கொஞ்சம் சிக்கலானது. சரியாகப் புரியாவிட்டால் என்னை லூசு என்றுதான் நினைப்பீர்கள். இதைச் சொல்லுறது கொஞ்சம் கஷ்டம். முயற்சிக்கிறேன். முதல்ல எச்சரிக்கை நான் சொல்லப்போறது உண்மை, கற்பனையில்லை. பின்நவீனத்துவப் பிசுக்கோத்தும் இல்லை. அவன் ஒரு விநோதன். சின்னாம்பி என்பது நான் அவனுக்கு வைத்த பெயர்தான். அவனுக்குப் பெயர் இல்லை. "உனக்கு பெயர் என்னடா" என்று அவனை ஒருமுறை கேட்டேன்.

"எனக்கு ஏன் பெயர் இருக்கவேண்டும்" என்றான். இந்த இடத்தில் நான் குழம்பித்தான் போனேன். சின்ன வகுப்பிலை கணக்கு வாத்தியார் சொல்லுவார், "நீ உன்னையும் குழப்பி, என்னையும் குழப்பி, வகுப்பையும் குழப்புறாய்" என்று. அந்தப் பாவம்தான் என்னவோ திருப்பித் தாக்குது.

நான் குழம்பினமாதிரிக் காட்டிக் கொள்ளவில்லை. "சரி உனக்குப் பெயர் சின்னாம்பி" என்று வைத்துவிட்டேன். சரி உங்களுக்குச் சொன்னால் என்ன? சின்னாம்பியைப் பற்றி உங்களுக்குத்தான் முதல்லே சொல்லுகிறேன். பெண்டாட்டிக்குக் கூடச் சொல்லவில்லை. அவள் முந்தியே 'மனிசன் லூசு சந்திப்புக்களுக்கு (அதுதான் 'இலக்கியச் சந்திப்புக்கள்') போகிறார் என்கிறாள். அதிலே இதைச் சொல்லி ஏன் வீண்வேலை. கடைசியாப் போன சந்திப்பிலே வேட்டியை உருவிறமாதிரி நாலு கேள்வி கேட்டாங்கள்;சரி அது இருக்கட்டும். திருப்பப் பாருங்கோ சின்னாம்பியில் தொடங்கி வேட்டியில் வந்து நிற்கிறேன்.

சின்னாம்பியை எப்ப முதலில் சந்தித்தேன்? அதுவுமொரு சின்ன அதிர்ச்சிதான்.நானும் 'நானுண்டு என் மொக்கைப் பதிவுண்டு' என்றுதான் இருந்தேன். யாரைவாவது திட்டி எழுதிப் கொஞ்சம் பிரபலமாகுவமென்று ஒரு பதிவு எழுதிக் கொண்டிருந்தேனாம். பின்னும் "கீக் கீக்"என்று ஒரு சாதியாச் சிரித்துக் கேட்டுது. 'ஷிவ்ட்' கீ வேலை செய்யவில்லையென்றுதான் யோசனை ஓடியது. என்றாலும் திருப்ப "கீக் கீக்"என்று சிரித்துக் கேட்டது. சத்தம் அந்தக் காலத்து 'கட்டை ஸ்பீக்கர்'இலிருந்து வருகிறமாதிரி, ஸ்டீரியோ இல்லை. "யாரடா அது?" என்று அதட்டினேன்.

எதிரில் பணிவாக "ஐயா வணக்கம்" என்று வந்தான். சாதாரண உயரம், சாதாரண உருவம், சொல்லிக்கொள்ள ஒன்றுமில்லை. அதுதான் எனக்குக் கொஞ்சம் கவலை. இரண்டு பந்தி வர்ணித்து உங்களை இம்சைப்படுத்தி இருக்கலாமில்லையா?

"எப்படி வந்தாய், முன்கதவு பூட்டியிருக்கே?"
"நான் ஏன் வரவேண்டும், நான் இங்குதான் எப்பவும் இருக்கிறேன்!"
"ஓஹோ தாங்கள்தான் கடவுளோ?"
"அதுதான் இல்லை, நானும் உன்னைமாதிரி ஒரு சாதாரணன்".
"கண்டுபிடித்து விட்டேன் நீ யாரென்று, பழைய நாடகங்களில் நீ நல்ல பேமஸ். நீதான் என் மனச்சாட்சி"
"கஸ்மாலம், கொஞ்சம் வித்தியாசமாக யோசி, இன்னும் பழைய காலத்திலை நிக்கிறாய். 'நனவிடை தோய்தல்' சக்கரவர்த்தி என்று மெல்பனில் இருந்து விருதெல்லாம் வரப்போகுது!"
"விருதா, நல்லதுதானே யப்பா!"
"இது நக்கல் விருது ஓய்,உமக்கு வயது போட்டுது என்று பூடகமாசச் சொல்லுறாங்கள்"

நானும் 'பதிவுலகத்திலே இது சகஜமப்பா'என்று இருந்துவிட்டேன்.

என்னோடு அந்தக் காலத்திலே படித்த உதயன் அடிக்கடி சொல்லுவான் "xyz இலே இதெல்லாம் சகஜமப்பா" என்று. இதிலே xyz என்னவாகவும் இருக்கலாம். உதாரணம் 'வாழ்க்கை, யானைபிடிப்பது, கொய்யாக்காய் களவெடுக்கிறது". இப்ப அவன் phD முடித்து அமெரிக்காவிலே. இவனைப்பற்றிச் சொல்லப்போனால் அது பெரிய கதை. ஆறாம் வகுப்பிலே தமிழ் வாத்தியாரைப் பிடிக்கவில்லை என்று கவிதை எழுதினான். வாத்தியாருக்கு ஒவ்வொரு நாளும் காலைச் சாப்பாடு இடியப்பமும் சொதியும் மட்டுமே என்பது ஊரறிந்த இரகசியம், மத்தியானச் சோற்றிலும் மீந்துபோன சொதியை ஊற்றித் தின்னுவார். சொதியர் என்றுதான் அவரை ஊரிலே தெரியும்.

"கொக்கு மூக்கனே, குதிரைச் செவியனே
நித்தமுனக்கு சொதி செய்வாள் உன்னில்லாள்
காட்டுவாய் உன் கொதியை எம் மீது
முறிந்தது பிரம்பு, என் பாவம் செய்தோம் யாம்?"


எப்பவுமே சிரிக்காத தமிழ் வாத்தியார் இதை வாசித்த பிறகு விழுந்து விழுந்து சிரித்தார். கடைசி வரி சரியில்லை என்று 'கொமெண்ட்' போட்டும் கொடுத்தார். கேதீஸ்வரனுக்கு இந்தச் சந்தங்களொன்றும் பிடிக்காது.

"முறிந்த பிரம்பொன்று
சொல்லிச் சென்றது
வாத்தியாரின் கொதியை..."


என்று எழுதவேண்டும் என்று திருத்தம் கொடுத்தான். நான் தலையைப் பிறாண்டிக் கொண்டேன்.

"டேய் உனக்குக் கவிதை எல்லாம் சுட்டுப் போட்டாலும் வராது, விட்டுர்ரா!"

திடுக்கிட்டு விட்டேன். இவனுக்கு நான் நினைப்பதுவும் தெரிகிறது.

"சின்னாம்பி" பரிதாபமாத் தொடங்கினேன்,"உனக்கு நான் நினைப்பதுவும் தெரியுதா?"
மீண்டும் "கீக் கீக்" என்று சிரித்தான் சின்னாம்பி. "அந்த 'அறிவில்' நான் கொஞ்சம் வீக்... நீ நினைப்பதில் ஒரு பகுதிதான் எனக்குத் தெரிகிறது, முழுக்கத் தெரியுதில்லை " என்று கொஞ்சம் வெட்கப்பட்டான்.

"சரி இப்ப சொல்லு நீ ஆர்?" பரிதாபமாகக் கெஞ்சினேன்.

"கேள்விக்குக் கேள்வி, மனிதனுக்கு எத்தனை அறிவு உண்டு?"

ஏழு என்று சொல்ல யோசித்து, "ஆறு" என்றேன்.

"எமக்குப் பன்னிரண்டு" என்றான்.


(தொடரலாம்)


-----------
கொதி -கடுங்கோபம்
சவர்க்காரம்- soap

24 comments:

 1. வணக்கம் அண்ணர் நலமா?
  ம் எல்லா வாத்தியாருக்கும் பட்டம் இருக்கும்போல? என்ர வாத்திக்கு புளித்தண்ணின்னு பட்டம் வைச்சிருந்தோம் ஏன்னா அவர் சைவக்காரர் எல்லா குழம்புக்கும் புளித்தண்ணிதானே பாவிப்பினம்..?
   உங்கள் அனுபவத்தில் எனது பால்யகாலத்தையும் நினைக்க வைச்சிட்டீங்கண்ண.

  ReplyDelete
  Replies
  1. நன்றிகள் @காட்டான்.'புளித்தண்ணி'இன்னும் நல்லாயிருக்கு. BTW, புதுப் பதிவுகள் ஒன்றையும் காணவில்லை. பிஸியே?

   Delete
 2. நல்ல பட்டம்! நல்ல ஆசிரியர்!சுவைமிகு நடை!

  சா இராமாநுசம்

  ReplyDelete
  Replies
  1. நன்றிகள் ஐயா. புலவர் வாயாலே இவ்வாறு கேட்க, உண்மையிலே மிக்க மகிழ்ச்சி :-)

   Delete
 3. //
  'ஆடு' என்று தலைப்புப் போட்டு "எங்கள் வீட்டிலுள்ள ஆடு வேப்பங்குழை சாப்பிடும்" என்று தொடங்கி நிறைய எழுதி '...இப்படி சவர்க்காரத்திற்குப் பல பயன்பாடுகள் உண்டு' என்று முடித்தாள்.
  //
  மாட்டை மரத்தில கட்டீற்று மரத்தைப் பற்றி எழுதாம சவர்க்காரத்தைப்பற்றி எழுதினது ரசிக்கும்படியா இருக்குது.

  தொடரலாம் அல்ல தொடரட்டும்.

  ReplyDelete
 4. //
  "எனக்கு ஏன் பெயர் இருக்கவேண்டும்" என்றான். இந்த இடத்தில் நான் குழம்பித்தான் போனேன்.
  //

  நல்லாருக்கு

  ReplyDelete
 5. மடையன்June 13, 2012 at 2:57 PM

  என்னய்யா எல்லோரும் இப்ப எல்லோரும் தொடராலாமா முடிந்ததா என்று முடிக்கிறீர்கள் பின் நவீனத்துவம் என்ற பெயரில் JK யின் தொல்லை தாங்க முடியவில்லை என்றால் நீங்கள் வேறு please இதுகளை நிப்பாட்டிபோட்டு பழையமாதிரி நல்ல கதைகளை எழுதுங்கள் இப்படி உங்கள் பதிவுகளை வாசிக்கும் சில வாசகர்களையும் சாகடிக்கதீர்கள்

  ReplyDelete
  Replies
  1. இது பின்நவீனத்துவம் இல்லைங்கோ :-)
   சே, எனக்கே இது புரியவில்லையே.

   Delete
  2. அண்ணே .. ரொம்ப க்ளோஸா நம்மளை யாரோ வோட்ச் பண்ணிக்கிட்டு இருக்காங்க .. எவ்வளவு அடிச்சாலும் என்னைய தெரியாது எண்டு சொல்லுங்க ... நான் உங்களை சந்திக்கவும் இல்ல .. கதைக்கவும் இல்ல!

   Delete
  3. :) இது செம மாட்டார்

   Delete
 6. கதையை விமர்சித்து விஷயத்தை உடைப்பதில் ஆர்வம் இல்லை. நான் ஆச்சரியப்பட்ட விஷயம் இந்த வகைக்கதை எழுத்து நடையில் பக்கா ஊர்ப்பாஷையில் இறங்கி எழுதுவது என்பது எனக்கு சீவனை கொண்டுபோற விஷயம். நீங்கள் அனாயசமாய் ஆடி ... நனைவிடை தோய்தலில் நடாலுக்கு பிரெஞ் ஓபன் தான் என்று நிரூபித்திருக்கிறீர்கள். அதற்குள்ளும் புதுமை புகுத்தலாம் என்று சொல்லுவது .. எனக்கு குட்டு தான் .. வாங்கிக்கொள்கிறேன் :)

  சிலநேரங்களில் புன்னகை .. சந்தக்கவிதை .. நகுலன் புதுக்கவிதை என்று உல்டா பண்ணி கலாய்த்த இடத்தில் சிரிக்க கூட முடியாமல் கேதாவின் மூக்குக்கு ஐஸ்கட்டி வைக்கவேண்டி இருந்தது. அப்பப்போ நம்மளை கலாய்தத்தை நான் கண்டுபிடிக்க இல்ல!


  BTW இறுதிப்பதிலில் இருக்கும் பன்மையை ரசித்தேன் ... Open end ஆக விட்டது இன்னமும் அருமை ..

  சின்ன கொமென்ட் .. எப்போதும் சொல்வது ..கிளே கோர்டை விட்டு விட்டு விம்பிள்டன் யூஎஸ் ஓபன் என்றும் ஆடிப்பாருங்களேன் ... கனடா வேறு போகிறீர்கள்!

  ReplyDelete
  Replies
  1. >கதையை விமர்சித்து விஷயத்தை உடைப்பதில் ஆர்வம் இல்லை.
   பாராட்டுறீங்களா, திட்டுறீங்களா :-) ?

   Delete
 7. வணக்கம் அண்ணா!ம்ம் வாத்திமார்களுக்கு பல பட்டங்கள் அதுவும் தமிழ் படிப்பிப்போர் தான் அதிகம் பட்டம் வாங்குவது!ம்ம் கவிதை சொதி சிரிக்க வைத்தது!

  ReplyDelete
  Replies
  1. தமிழ் வாத்தியார் என்றாலே ஒரு 'அன்புதான்'.

   Delete
 8. சந்தம் கண்டு மிக நொந்து
  விந்தை பதிவு ஒன்று தந்து
  முந்தை பழைய வினையோ
  இல்லை மூண்ட பெரும் பழியோ
  என என்னை நான் கேட்டு உழல
  நீர் தந்த இப்பதிவு போதும்.

  தெள்ளு தமிழ் தனிச்சந்தம்
  அது விட்டும் கவி உலகு உண்டு
  இதை குட்டி உரைக்க ஒரு அரங்கு
  அதில் தர்க்கம் அதில் ஒரு மருங்கு
  எல்லை வரையும் ஒரு கூட்டம்
  அதை எட்டி கடக்கும் ஒரு கூட்டம்
  இல்லை எனில் இந்நாளில்
  நல்ல இலக்கியம் வளர்ந்திடாது.
  மெல்ல கிணற்றினுள்ளே
  விழுந்தும் எழுந்தும் பின் மாயும்
  மாரி தவளைகள் போல்
  நாம் மாய்வது உலகில் திண்ணம்.

  எண்டாலும் உங்கட நடை உங்களுக்கொரு கொடை அண்ணை. சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது. சந்தம் கதைச்சவனுக்கு மூக்குடைஞ்சு போச்செண்டு சின்னாம்பியே சொன்ன மாதிரி கிடக்கு கமெண்டுகள வாசிக்கேக்க. அதை நினைக்க இன்னும் சிரிப்பு வருகுது.

  ReplyDelete
 9. முறிந்த பிரம்பொன்று
  சொல்லிச் சென்றது
  வாத்தியாரின் கொதியை..."

  அண்ணை உங்களுக்கு கவிதை சும்மா ஈசியா வருகுதப்பா. பொறாமை லைட்டா :)

  ReplyDelete
  Replies
  1. உல்ட்டா (parody/spoof) கவிதைகள் மட்டும்தான் எனக்கு வரும்... எனவே கவிஞர்களே பயப்படவேண்டாம் :-)

   Delete
 10. உங்க கூட படித்த உதயன் அடக்கடவுளே... இது வேறயா இல்லை நான் நினைக்குறது தானா ? கதை முழுதும் உங்கள் குறும்பு கொப்பளிக்குது அண்ணை, அனா என்ன ஆங்காங்கே சிலருக்கு கொட்டும் விழுது.

  //நீ உன்னையும் குழப்பி, என்னையும் குழப்பி, வகுப்பையும் குழப்புறாய்" என்று. அந்தப் பாவம்தான் என்னவோ திருப்பித் தாக்குது// வாய் விட்டு சிரித்தேன். மேல் வீட்டில் இருக்கும் ஆந்திரா அக்கா என்ன நினைத்தாவோ தெரியாது.

  சரவணன் என்று எனக்குத் தெரிந்த ஒரு அமெரிக்க டாக்டர் இருக்குறார் - சந்திரமுகிக்கே வயித்தியம் பார்த்தவர் - அவரை கொன்சல்ட் பண்ணிப் பாருங்கோ சின்னாம்பி பிரச்சனை தீரும்.

  ReplyDelete
  Replies
  1. >உங்க கூட படித்த உதயன் அடக்கடவுளே... இது வேறயா இல்லை நான் நினைக்குறது தானா

   இவரு ரொம்ப நல்லவரு.

   Delete
  2. நல்லாக் கேட்டுக்குங்க நானும் ரவுடிதான் நானும் ரவுடிதான் நானும் ரவுடிதான்.

   Delete
 11. "..'ஆடு' என்று தலைப்புப் போட்டு ....'
  '...இப்படி சவர்க்காரத்திற்குப் பல பயன்பாடுகள் உண்டு..'
  இவற்றையெல்லாம், மறக்காமல் நினைக்கவும், சிரிக்க வைத்து எழுதவும் தனித் திறமை வேண்டும்.

  ReplyDelete