Tuesday, October 23, 2012

மனைவியைச் சந்தோஷமாக வைத்திருப்பது எப்படி?

மனைவியைச் சந்தோஷமாக வைத்திருப்பது எப்படி?
(20 வழிகள்)

என்று இணையத்தளம் ஒன்றில் வெள்ளைக்கார அம்மணி ஒருவர் எழுதியிருந்தார். அதை நான் எங்கள் 'கலாச்சாரத்திற்குப்' பொருத்தும் வகையில் மொழிபெயர்த்து என் கொமென்ற்'களுடன் கீழே தருகிறேன்.

(1)மனைவியைப் பார்த்துப் புன்சிரியுங்கள். நீங்கள் ஒன்றும கதை/வசனங்கள் பேசத் தேவையில்லை, வெறுமனே ஒரு கனிவான புன்னகையைக் கசியவிடுங்கள். முக்கியம் புன்னகைக்கும்போது அவள் கண்களைப் பார்க்கவேண்டும்.

நீங்களே 'ஒன்றும் பேசத் தேவையில்லை' என்று சொல்லிவிட்டீர்கள். பிறகு என்ன? கடைப் பிடித்துப் பார்த்தேன். "சும்மா அசட்டுச் சிரிப்புச் சிரிச்சுக் கொண்டிருக்காமல் வூல்வேர்த்'துக்குப் போய் இந்த லிஸ்ட்'இல இருக்கிற எல்லாத்தையும் வாங்கி வாங்கோ" என்று ஒரு நீஈஈஈளமான ஒரு பேப்பர்த் துண்டு வந்தது.


(2) அவளிடம் (கோபத்தில்) கத்தவேண்டாம். மென்மையாக, மகிழ்வாக, அடங்கிய குரலில் பேசவும். (அடக்கி வாசிக்கச் சொல்லுறா). அவள் காதுகளில் கத்துவது அவளுக்கு ரொம்பக் கோபமூட்டும். நீங்கள் கத்தாமலேயே அவளுக்குக் காது கேட்கும்.

என்னது? கத்துவதா? மூச். அம்மா தாயே நீங்கள் எந்த நூற்றாண்டில் இருக்கிறீர்கள்?


(3) மனைவி சொல்வதை எப்போதும் கேளுங்கள். அது மிகவும் கஷ்டமானது என்று எனக்குத் தெரியும். உங்களால் அவள் சொல்வதைக் கொன்சென்ரேட் பண்ணிப் புரிந்துகொள்ள முடியாது. அது போறிங்'ஆக இருக்கலாம் அல்லது நீங்கள் செய்து கொண்டிருக்கும் வேலையைப் பாதியில் விட வேண்டி வரலாம். முயற்சி செய்யுங்கள். அவள் முக்கியமான ஒன்றைச் சொல்லவரலாம்.

இதைத்தான் எங்கள் தமிழர் "மனைவி சொல்லே மந்திரம் என்பார்கள்". யாருக்காவது மறுக்கிற துணிச்சல் உண்டா?

(4) மனைவி எதாவது ரிப்பேர், அல்லது வேறு 'அலுப்பு' வேலைகள் செய்யச் சொன்னால் எதையும் பின்போடாதீர்கள். சூடாற முதல் செய்யவும். இதெல்லாம் உங்கள் நல்லதுக்குத்தான் அவள் சொல்லுகிறாள்.

நாம் பிறப்பு எடுத்ததே எதற்காக? இதுமாதிரித் தொட்டாண்டி வேலை பார்க்கத்தானே?

(5)உங்கள் மனைவியைப் புகழ்ந்துதள்ளுங்கள். பாசாங்கு பண்ணாமல் 'உண்மையாகவே' சொல்லவும். அவள் 'ஷொப்பிங்' போனால், "உனக்கு என்ன வாங்கினாய்" என்று அக்கறையாகக் கேட்கவும். அப்படிக் கேட்டால்தான் அவள் வாங்கிவந்த "ட்ரஸ்' உங்களுக்குப் பிடித்திருக்கிறது என்று அவளுக்குப் புரியும்.

நான் மெய்யாகவே புகழ்ந்துதான் சொல்லுகிறேன்.. போனகிழமைகூட "நீ கிண்டிய கேசரி நல்லாகத்தான் இருக்குது" என்று புகழ்ந்தேன். 'கேக்குக்கும் கேசரிக்கும் வித்தியாசம் தெரியாதா?' என்று கோபித்துக் கொண்டாள்.

(6)ரொம்பக் கஞ்சத்தனம் வேண்டாமே. அவளுக்குக் தேவையானல எல்லாவற்றையும் நீங்களே வாங்கிக் கொடுத்துவிட்டால், அவளுக்குக் காசு செலவழிக்க வேண்டிய தேவை இல்லையல்லவா?

வேறை வழி?

(7)காசை வீணடிக்காதீர்- குடி, பீடி/சிகரட், 'படம்' போட்ட புத்தகம் என்று...

சான்ஸ்ஸே இல்லை

(8) ரொய்லட் மூடியை எப்போதும் மூடி வைத்திருக்கவும். உங்கள் மனைவி இது விசித்திரம் என்று நினைத்தால், உள்ளே உள்ள 'தண்ணீர்' தெரியாமல் இருப்பது அழகு என் விபரிக்கவும்.

இது புரியவே இல்லைங்கோ.

(9) உங்கள் உடைகளை நிலத்தில் வீசி எறியவேண்டாம். உடை மாற்றியதும் அழுக்கு உடைகளை அதற்குரிய 'லோண்டரி பாஸ்கற்' இனுள் போடவும்.

(10) பற்களை ஒழுங்காகத் துலக்கவும்.

(11) ஒழுங்காகக் குளிக்கவும்.

மேலே (9), (10), (11) - ஞாபகம் இருக்கும் குழந்தைப் பருவத்தில் இருந்ததே யாராவது சொல்லிக்கொண்டுதான் உள்ளார்கள். சின்ன வயசிலே (அதாவது கல்யாணம் கட்டமுதல்) அப்பா/அம்மா, இப்ப மனிசி. ஆனால் மனிசி ஒருக்கா மட்டும்தான் ஓ(ர்)டர் போட்டது சொன்னது. பிறகு திருப்பிச் சொல்லவேண்டிய தேவை வரவேயில்லை.

(12)குப்பைகளை வெளியே எடுத்துச் செல்லவும். அது உங்கள் வேலை, அவளுடையது அல்ல.

நீங்கள் சொல்லமுதலே-- சிட்னியிலே, இந்தச் சில்லுப் பூட்டிய குப்பை வாளிகளை (Wheelie Bins), தந்தைக் குலம்தான் வீதிக்கரைக்கு இழுத்துச் செல்லும். சிட்னியில் மட்டுமல்ல, முழு அவுஸ்திரேலியாவிலேயும் அப்படித்தான்..

(13) அவளிடம் கார் இருப்பின், சே(ர்)விஸ்ஸிற்கு நீங்கள்தான் எடுத்துச் செல்லவேண்டும். எப்போது அடுத்த சே(ர்)விஸ் வருகின்றது என்று நீங்கள்தான் ஞாபகம் வைத்திருக்கவேண்டும்.

மேலே (6) ஐப் பார்க்கவும்

(14) ரிவி'யில் என்ன பார்ப்பது என்று அவள்தான் முடிவெடுக்கவேண்டும். அவள் பார்க்கும் 'மெகா' சீரியலைப் பக்கத்தில் இருந்து முடியும்வரை பார்க்கவும். வெறுமனே தேமே'யென்று பார்த்தால் போதாது. 'சுவாரசியமாகப்' பார்க்கவேண்டும்.

மாட்டேன் போ!! நேற்றுத்தான் "மாற்றான்" பார்த்தேன்.

(15) உங்களுக்கான உடைகளையோ பாதணிகளையோ அவளே தேர்ந்தெடுக்கட்டும். எப்படியும் நீங்கள் தேர்ந்தெடுப்பதைவிட அவை நன்றாக இருக்கும்.

சொந்தமாக ஒரு விருப்பு/வெறுப்பும் இருக்ககூடாது என்கிறீர்கள். இதைத்தான் ஞானிகள் "பற்றற்றிரு" என்றார்கள்.

(16) (மிக முக்கியம்). எக்காரணம் கொண்டும் மனைவிமேல் கோபமாகவே வேண்டாம். ரொம்பச் சூடானால், உடனே வெளியே போய் காலாற நடக்கவும். சூடு இறங்கியபின் உள்ளே வரவும். வந்தவுடன் மனைவிக்கு ஐஸ் வைக்கவும்.

மேலே (2) இல் சொல்லியும் உங்களுக்குத் திருப்தி வரவில்லை. ம்ஹூம். ரொம்பச் 'சூடானால்' வெளியே துரத்தப்படுவீர். எனவே வெளியே கௌரவமாக நாங்களாகவே முதலில் போகச் சொல்லுகிறீர்கள் போல.

(17) மனைவியிடன் 'ஐ லவ் யூ' அடிக்கடி சொல்லவும். நிறைந்த மனத்துடன் சொல்லவும். நக்கல் கூடவே கூடாது.

ற்ம்ம்ம்ம்ம்ப முயற்சித்தேன். "இது நக்கலா? அல்லது கிண்டலா?" என்கிறாள்.

(18)உங்கள் மனைவி எதாவது ஒரு சிக்கலில் மாட்டுப்பட்டால், புரிந்துணர்வுடன் நடவுங்கள். குற்றம் சாட்டும் வேலை எல்லாம் வேண்டாமே.

குற்றம் சாட்டும் அளவிற்குத் துணிச்சல்?

(19) நீங்கள் சிக்கலில் மாட்டுப்பட வேண்டாம். அப்படி மாட்டுப்பட்டாலும் அவளையும் உதவிக்கு இழுக்காது நீங்களே தனித்துத் தீர்த்து வைக்கவேண்டும்.

முயற்சிக்கிறேன். மேலே (18) இல் இருக்கிற மாதிரி புரிந்துணர்வு கிடைக்குமா?

(20) (மிக முக்கியம்) அவள் உங்கள் வேலைக்காரி இல்லை. அவள் பேசும்போதெல்லாம் 'கப்சிப்' என்று கேட்கவேண்டியது உங்கள் வேலை. அவள் பேசும்போது குறுக்கிடவேண்டாம்.

ஏற்கெனவே அப்படித்தானே? அவள் பேச, நான் கேட்கமட்டும் முடியும். சின்னச் சந்தேகம். (1) இலிருந்து (20) வரை உள்ளதைப் பார்க்க 'நாமதான்' வேலைக்கா..... சரி சரி எனக்கேன் வம்பு?---------------

Image from: http://www.cartoonfaces.net/2009/11/cartoon-picture-of-cute-little-dog-with.html

7 comments:

 1. இரண்டாவது சங்கதியில் //அடக்கி வாசிக்கச் சொல்லுறா// நீல நிறத்தில் உங்கள் அபிப்பிராயமா வர வேணுமோ ?

  பட் உங்கட நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு.

  ReplyDelete
  Replies
  1. > நீல நிறத்தில் உங்கள் அபிப்பிராயமா வர வேணுமோ ?
   திருத்தி விட்டேன்.


   >பட் உங்கட நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு.
   பட், இதை எங்கேயோ கேட்டிருக்கிறேனே :-)?

   Delete
 2. அன்பாய் கேக் செய்து தரும்போது, கேக்குக்கும் கேசரிக்கும் வித்தியாசம் தெரியாட்டில்..... கோபிக்காமல்?? வாழ்க்கையில் இனி கேக்கும் இல்லை கேசரியும் இல்லை....!!

  ReplyDelete
  Replies
  1. அதில்லாவிட்டால் வேறு ஏதோ வரும் :-) ; புதிது புதிதாகச் சமைத்துப் பார்ப்பதை யார் சாப்பிடுவதாம்?

   Delete
 3. மனைவி உங்களிடம் காட்டும் அன்பு புரியாமல் பேசுகிறீர்களே சார்.
  1)எதற்காக கதைத்து உங்கள் சக்தியை வீணடிக்க வேண்டும்.
  2)கத்தி பிரசரை ஏன் கூட்ட வேண்டும்.
  3)மனைவி உங்கள் நலன் கருதி எதையாவது கூறக்கூடும்.
  4)ஏல்லாவற்றையும் சேர்த்து வைத்து விட்டு கடைசியில் தலையை பிறாண்டாமல் இருக்க மனைவி செய்யும் உதவி அது.
  5)ஏல்லாருக்குமாக தனியே சென்று வாங்கிவரும் மனைவியிடம் கணணிக்கு முன் இருந்தவாறே இதை கூட கேட்க முடியதா?
  5)-20) இப்படியேயேயே அடுக்கிக்கொண்டேடேடே .......போபோபோகலாம் சார்ர்ர்....

  ReplyDelete
  Replies
  1. இது எங்கேயோ உதைக்குதே?

   Delete
 4. I refer to your comment " 9, 10, 11"..... This is the beauty of a good team leader.

  ReplyDelete