Tuesday, September 10, 2013

பென் ஜோன்சனின் ஓட்டம் அல்லது "இதயம்" நிறைந்த காதல்

அழகான ஆறு, கரையில் மூங்கில் மரங்கள்,
வளாகம் முழுக்க அழகிய மரங்கள்...மிக அழகான் மரங்கள்-சிலது பூத்துக் குலுங்கும் சிலது பூக்காது, ஆனால் எல்லாமே அழகு. , மிக அழகான கட்டடங்கள். படத்தில் இருப்பது மாதிரி உண்மையாகவே பல 'சீனறிகளைக்' கொண்ட பேராதனைப் பல்கலைக்கழகத்தில் இது நடந்தது.

காலம்: 1992 ஒலிம்பிக் முடிந்து சில நாட்கள். உசேன் போல்ட் 'ஐ மட்டும் அறிந்த இளம் தலை முறைக்கு பென் ஜோன்சனைப் பற்றிச் சொல்லவேண்டும். நான்கு வருடங்களின் முன், 1988 இல் பென் ஜோன்சன் 100 மீட்டர் ஓட்டப் போட்டியில் தங்கப் பதக்கம் பெற்று பிறகு ஊக்க மருந்து சாப்பிட்டதாக நிரூபிக்கப்பட்டு பதக்கத்தைப் இழந்தவர். பதக்கத்தை இழந்தாலும் 9.79 செக்கனில் 100 மீட்டர் ஓடியது அந்தக் காலப் பகுதியில் நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று. என்பதால் அடுத்த ஒலிம்பிக் காலத்திலும் பென் ஜோன்சன் பேசப்பட்ட நபராகிறார்.

மீண்டும் கதைக்கு: ஆற்றுக்கு இந்தப் பக்கம் அக்பர் விடுதியும் பொறியியல் பீடமும். அந்தப் பக்கம் மிச்ச எல்லாப் பீடங்களும் விடுதிகளும். அக்பர் விடுதி ஆண்கள் விடுதி. அங்கிருந்த பெரிய விதானையார் என்று அறியப்பட்ட பேர்வழியைப் பற்றிக் கொஞ்சம் சொல்ல வேண்டும். பேருக்கேற்ற மாதிரி ஆள் நன்றாக இடம் வலமாக வளர்ந்த ஆள். நல்ல பெலசாலியும் கூட. இவரை நகராமல் நிறுத்த நாலைந்து பேர்கள் போதாது. பெரிய விதானையார் என்று இவருக்குப் பெயர் வந்த காரணம், பெரிய என்பது உருவத்தால் வந்தது. விதானையார் என்பதற்கு ஒரு மசமசப்பான காரணம் உண்டு. சின்ன விதானையார் என்றும் இன்னொருவர் இருந்தார்.

இன்றைக்கு பெரிய விதானையாருக்கு நல்ல வெறி. 'ஃபாகல்ரி டே' என்று ஞாபகம். கான்ரீ'னுக்குப் பககத்தில் இருந்த பெரிய 'வரைதல் கட்டடத்தில்' டின்னர் & டான்ஸ். 'தண்ணி' ஆறாக ஓடாவிடினும் அருவியாக ஓடியது. ஒருசிலரை விட அநேகர் 'சோடா மூடி' அளவு பானத்தை மட்டும் முகர்ந்து விட்டு 'தள்ளாடிக்' கொண்டிருந்தார்கள். மிக முக்கியமாக, பெண் பிள்ளைகளைக் கண்டால் இன்னும் அதிகம் தள்ளாடினார்கள். "உன்னால தானையடி குடிக்கிறன்" என்று பொதுவாக அடிக்கடி சொல்லிக் கொண்டார்கள். அதுமட்டுமல்ல சிங்களப் பெண் பிள்ளைகளைக் கண்டால் திடீரென்று 'இங்கிலிஷ்' பேசத் தொடங்கினார்கள். 'இங்கிலிஷ்' கிழவிகள் என்று அறியப்பட்ட ஆங்கிலம் படிப்புக்கும் விரிவுரையாளார்களுடன் மட்டும் எதையும் பேசாமல் ஒரு அசட்டுச் சிரிப்புச் சிரித்துவிட்டு நழுவினார்கள். மேடையில் ஒரு மவுசு இழந்த ஒரு இசைக்குழுவினர் புதிய, பழைய சிங்கள, ஆங்கில, சில தமிழ்ப்பாடல்களைப் பாடிக் கொண்டிருந்தனர். ஆத்மா லியனகே'இன் லியத்தம்பராய் மட்டும் சுமாராகப் பாடப்பட்டது. மாணவர்கள் நடனமாடிக் கொண்டிருந்தனர். நடனம் என்றால் கிட்டத்தட்டத் தவளைகள் தாவிக் கொள்வதுமாதிரி... என்றாலும் இது கஷ்டமான வேலை. நிறைய 'எனர்ஜி' தேவைப்படும். களைத்துப் போனால் அதைக் காட்டிக் கொள்ளாமல் "வெறி" மாதிரித் தள்ளாட்டம் போடவேண்டும். இருக்க ஒரு சின்ன இடைச்செருகல் போடவேண்டியுள்ளது. நடனம் என்றால் நிறையக் கற்பனை கிற்பனை பண்ணக் கூடாது. ஆண்கள் தங்கள் பாட்டுக்குத் தனியாக நடனம் என்று எதோவொன்றைச் செய்து கொண்டிருப்பார்கள். பெண்களுடன் சேர்ந்து நடனம் ஆடுவது என்பது ஆராவது 'செற்' ஆன சோடிகளுக்கு மட்டும்தான். சில சிங்களப் பெண் பிள்ளைகள் இதேமாதிரி இன்னொரு இடத்தில் ஒரு குழுவாக நடனம் ஆடிக்கொண்டிருப்பார்கள். இதுதான் கம்பஸ் நடனம். தமிழ்ப் பிள்ளை யாராவது ஒருத்தி தன்னும் ஆடியதாகத் தகவல் இல்லை. (ஆட்டக்காரி என்று லேபல் அடிக்கப்பட்ட பெண்களும் ஆடியதாக இல்லை);ஆனால் லீவில ஊருக்குப் போகேக்க யாராவது ஒன்று கேட்கும் "கம்பசில பெட்டையள் எல்லாம் நல்ல "சோசலாக" பழகுவாள்கள் என்ன?". இந்த இடத்தில் மட்டும் கற்பனை பீறிட்டுக் கிளம்பும் . அங்காலை இஞ்சாலை பார்த்துவிட்டு "மச்சான் இந்த டின்னர் அண்ட் டான்சிலை பெட்டைகளோடைதான் டான்ஸ் ஆடுறது. சொல்லி வேலையில்லை". என்றாலும் நம்பாதமாதிரி "மச்சான் நீயெல்லாம் டான்ஸ் ஆடமாட்டாய்! " என்று ஆள் தொடரும். உள்ளுக்கு நம்பத் தொடங்கியிருப்பார்.

சரி பெரிய விதானையாரை மீண்டும் கவனிப்போம். அவருக்கு கூடப் படித்த ஒரு சிங்களப் பெட்டையில ஒரு கண். கேட்கத் துணிவில்லை. இதயம் முரளி கணக்காக ஒரு மௌனக் காதல். (அவளிற்குப் பெயர் சம்பிகா என்பது மட்டும் இப்போதைக்குப் போதும்)

"மச்சான் இவளுக்கு என்னிலை ஒரு கண் " என்று சொல்லிக் கொள்வார். உண்மை என்னவென்று "பாலர்" வகுப்புக் போகத் தொடங்கிய குறிஞ்சிக் குமரன் கோவில் ஐயரின்ர மகனுக்கே தெரியும். கிடக்கட்டும். இன்றைக்கு இருக்கிற வெறியிலே ஆள் அவளைக் கேட்டாலும் கேட்கலாம்.

"மஷான், இண்டைக்கு நான் இவளோடை கதைக்கப் போறன்" என்று தொடங்கினார்.

"உனக்கு வெறி மச்சான், இண்டைக்குச் சரி வராது, நாளைக்குக் கேட்போம்" என்றான் நூலகர் சிவா. (இவனுக்கு நூலகர் என்று பட்டம் வந்ததற்கு காரணங்கள் நான் சொல்லாமலே உங்களுக்குப் புரிந்திருக்கும்)

விதானையார் மிகத் தெளிவாகச் சொன்னார் "மச்சான், நாளைக்கு எனக்கு வெறி இறங்கினால், கதைக்கத் துணிச்சல் வராது, இண்டைக்கே இவளைக் கேட்கப் போறன். வெறி இருக்கக்கைதான்தான் மச்சான் கதைக்கலாம்".

"எனக்குத் தண்ணி அடிச்சால்தான் இங்கிலிஷ் வரும், I want to talk to her in English மஷான்" தொடர்ந்தார் விதானையார். சரிதான் இவருக்கு சிங்களத்தில் "எக்காய், தெக்காய், துணாய், ... பாலுவாய்" வரைதான் வரும். எனவே சிங்களப் பெட்டையை எப்படி டாவடிக்கிறது? "ஷேக்ஸ்பியர் துணை" என்று மானசிகமாகக் கும்பிடு போட்டுவிட்டு இங்கிலிஷ்'இல் விளையாட வேண்டியதுதான். இதிலும் சிக்கல். விதானையார் அறிந்துவைத்திருந்த இங்கிலிஷ்'இல் நிறைய 'நாலெழுத்து' க் கெட்ட வார்த்தைகள்தான் அதிகம். மருதானைப் பக்கம் 'இங்கிலிஷ்" படம் பார்த்து ஆங்கில அறிவை வளர்த்துக் கொண்டதால் வந்த வினை. "மச்சான் நான் வெள்ளைக்காரன் மாதிரி இங்கிலிஷ் கதைப்பன்" என்று விதானையார் தொடர, திடுக்கிட்டுவிட்டான் ஆங்கிலப் புலவர் வீரசாமி (இயற்பெயர் எதற்கு?). வீரசாமியைப் பற்றி இரண்டே வசனங்களிற் விபரிக்க வேண்டுமானால், ஒன்று: அவன் அடிக்கடி ஆங்கிலப் பழமொழிகளைச் சொல்லுவான், இரண்டு: ஒட்டுமொத்த ஆங்கில மொழியையே தான் குத்தகைக்கு எடுத்தவிட்டது மாதிரிப் பீலா விடுவான்.

சாம்பிளுக்கு ஒன்று சொல்ல வேண்டுமானால், "மச்சான் கேள்," என்று தொடங்கி
''The perfection of wisdom and the end of true philosophy is to proportion our wants to our possessions, our ambitions to our capacities, we will then be a happy and a virtuous people.'' by Mark Twain என்று முடிப்பான். எனக்கு 20 வருடங்கள் கழித்தும் இன்னும் இது புரியவில்லை.

"மச்சான் வா! இண்டைக்குக் கேட்டிடுவம்" என்று தொடங்கினான் பொதிசுமந்த வரதன். வரதன் குழந்தை மனசுக்காரன். பெண்பிள்ளைகள் எதாவது பாரம் சுமந்தால் அவனுக்கு மனம் பொறுக்காது. ஓடிச்சென்று வாங்கித் தான் சுமப்பான். அப்பாதெல்லாம் கிளாலி, கொம்படி கடந்து யாழப்பாணம் போகவேண்டுமென்றால் வரதன் ஒரு வரப்பிரசாதம்- கம்பஸ் பெட்டைகளுக்கு; நாலைந்து பெண்களின் பொதிகளைத் தனியாளாக சுமந்து கொண்டு கிளாலி கொம்படி எல்லாம் திரிந்தபடியால் ஆள் நல்ல பெலசாலி என்பதை அறிவீர்கள்.

விதானையாருக்கு இப்ப கொஞ்சம் பயம் பிடித்துவிட்டது. என்றாலும் உள்ளே போயிருந்த நான்கு 'மூடிகள்' அளவான வெளிநாட்டுப் பானம் தந்த உத்வேகத்தில் படீரென்று எழுந்து நின்றார்.

"மச்சான் இந்த நேரம் அவளவை அக்பர் பாலத்தைத் தாண்டிப் போயிருப்பாளவ, நீ இன்னுங் கொஞ்சம் சுணங்கினால் ராமநாதன் ஹோலுக்குப் போய்த்தான் பிடிக்கவேணும்" என்று இன்னும் ஏற்றத் தொடங்கினான் பொ.சு.வரதன். எல்லாருக்கும் 'ஏத்திவைத்துக் கூத்துப் பாக்கிற' ஆர்வம். என்றாலும் விதானையார் வழமையாக எப்பவும் கடைசி நேரத்தில் ஒரு 'ராஜதந்திரப்' பின்வாங்கலில் ஈடுபட்டுச் சிக்கல்களில் இருந்து நழுவுவதால் கூத்து நடைபெறாது என்றுதான் எல்லோரும் எண்ணியிருந்தார்கள். என்றாலும் இறைவன் சித்தம் வேறக இருந்தது.

விதானையார் அந்தக் காலங்களில் சினிமாக் கதாநாயகர்கள் செய்வதுமாதிரி இடது கையால் தலை முடியைக் கோதிக்கொண்டார். தோள்களைக் குலுக்கினார். பிறகு நாம்பன் மாடு மூசுகிறமாதிரி மூச்சைச் சத்தமாக விட்டார் "டேய், பென் ஜோன்சன் தோத்தான்டா" என்றுவிட்டுத் திடீரென மிக வேகமாக ஓடத் தொடங்கினார். ஓரிரு விநாடிகள் தாமதித்துத்தான் எல்லாருக்கும் நிலைமையின் "சீரியஸ்னெஸ்' விளங்கியது. எல்லாரும் இவருக்குப் பின்னால் ஒடத்தொடங்குகிறார்கள். என்றாலும் யாராலும் விதானையாரை முந்தமுடியவில்லை.இவர்கள் அக்பர் பாலத்தின் இந்தப் பக்கத்திற்குக் கிட்டப் போகும்போது விதானையார் பாலத்தின் அடுத்தபக்கத்திற்குக் கிட்டஓடுவது தெரிந்தது.

அடுத்த சீன்: அக்பர் பாலம் தாண்டியவுடன் கண்ணில் படும் பெயர் தெரியாத, கூடாரமாகச் சடைத்து வளர்ந்திருக்கும் மரத்தின் கீழ் நடக்கிறது. சம்பிகா பழைய தமிழ்ப் படங்களில் வருகிறமாதிரி தோழிகளுடன் மரத்தில் உள்ள கொப்பொன்றில் சாய்ந்து நிற்கிறாள். அருகில் விதானையார். விரைவாக ஓடியதால் தலையெல்லாம் வியர்த்து ஈரமாகி இருந்தது. ஆனால் இவர் மிகத் தெளிவாக ஏதோ கதைத்துக் கொண்டிருந்தார். ஏதும் குளறுபடி நடந்தது மாதிரி இல்லை. விதானையார் தன் காதலைச் சொல்லிருந்தால் சீன் இப்படி இருக்கமாட்டாது என்று தெரிந்தது. இவர்கள் எல்லோரும் போய்ச்சேர ஒரு அசௌகரிய மௌனம். என்ன கதைப்பது என்று யாருக்கும் புரியவில்லை. என்றாலும் நடந்ததை ஊகிக்கக் கூடிய வகையில் அடுத்த வசனத்தை விதானையார் ஆங்கிலத்தில் விட்டார்.
"சம்பிகா, அடுத்த கிழமை கொடுக்க வேண்டிய 'பிராக்ரிகல் ரிப்போர்ட்'டை முடித்துவிட்டேன். நாளைக்குக் கொடுக்கிறேன்."

(முடிவுரை: இச்சம்பவம் நடந்து சிலநாட்களின் பின் "இதயம்" திரைப்படத்தைக் கண்டியில் உள்ள ஒரு பாடாவதி தியேட்டரில் பார்த்தோம். விதானையார் கண் கலங்கியதாகப் பக்கத்தில் உட்கார்ந்திருந்த பொ.சு.வரதன் சொன்னான். என்றாலும் அன்று படம் பார்த்த கனபேர் சில பல காரணங்களால் கண் கலங்கியதால் "விதானையார் கண் கலங்கிய காதை" பெரிதாகப் பேசப்படவில்லை. அவனவனுக்கு அவனவன் பிரச்சினை!)
பொறுப்பாகாமை :
இது உண்மைச் சம்பவத்தை வைத்துக் கற்பனை செய்யப்பட்டது என்று பல பதிவர்கள் "பொறுப்பாகாமை/டிஸ்கி போடுகிறார்கள். எனக்கு அவ்வளவு நெஞ்சுரம் இல்லை. எனவே இது "உண்மையில்லாத சம்பவத்தை" வைத்துக் கற்பனை செய்யப்பட்டது என்று கூறிக்கொள்கிறேன்.