Friday, August 1, 2014

வைஜந்திமாலா

அநேகமான யாழ்ப்பாணத்தவர் மத்தியில் ஒரு கருத்துண்டு. 'தென்னிந்தியர்தான் சினிமாப் பைத்தியங்கள், சினிமா நடிகர், நடிகைகளுக்காக எதையும் செய்வார்கள். நாம் அப்படியிலை. படம் பார்ப்பதோடு நிறுத்திக் கொள்வோம்" என்று. அண்மையில், விஜய் கட்-அவுட்'டிற்கு பாலாபிஷேகம், அதே யாழ்ப்பாணத்தில்தான் நடந்தது. ஆனால் இதெல்லாம் 'இப்பத்தைய கூத்து, முன்பெல்லாம் இப்படியில்லை" என்று இதைப் புறந்தள்ள மாட்டோமா? முதலில் இதை வாசியுங்கள்.

வைஜந்திமாலா'வை நான் நேருக்கு நேர் சந்திப்பேன் என்று கனவிலும் நினத்திருக்கவில்லை.
முதலில், இது அந்நாள் நடிகை வைஜந்திமாலா'வைப் பற்றியதில்லை, எனச் சொல்லிவைக்கிறேன். இவர் தாடி மீசை எல்லாம் வைத்த ஒரு முதியவர். எண்பது வயது இருக்கலாம்-சில வருடங்கள் முன்பின்னாக இருக்கலாம். ஆசாமி வயதுக்கு நல்ல ஆரோக்கியம். ஆரோக்கியத்திற்குக் காரணம் அவர் தினமும் காலை வடமராட்சி துன்னாலையிலிருந்து பருத்தித்துறை கடற்கரைக்கு 'ஓட்டப் பயிற்சி' செய்ததுதான். இது இவர் இளமைக்காலத்திலிருந்து நடை பெறுவது. ஒருநாளும் தப்புவதில்லை. இப்போது வயதாகிவிட்டதால் ஓடமுடிவதில்லை என்பதால் ஓட்டத்தை வேக நடையாக்கிவிட்டார். துன்னாயிலிருந்து பருத்தித்துறை ஐந்திலிருந்து ஆறு கிலோமீற்றர் இருக்கலாம். எனவே போக, வர என்று ஒவ்வொரு நாளும் அன்னார் குறைந்தது பத்துக் கிலோ மீற்றர்களாவது கடக்கிறார். ஏன் இப்படித் தினமும் "பருத்தித்துறைக் கடற்கரைக்குப் போகின்றார் என்று பிறகு சொல்கின்றேன்.

ஏதோ ஒரு சுபயோக தினத்தில், அதாவது விமான ரிக்கற் மலிவாகக் கிடைத்த ஒரு நாளில், நானும் சிட்னியிலிருந்து புறப்பட்டு யாழ்ப்பாணம் போய்ச் சேர்ந்தேன். தனியே இல்லை. பெண்டாட்டி, பிள்ளை குட்டிகளுடதான். பிறந்த ஊரில் நிற்க வசதிப்படவில்லை என்று மனைவியின் ஊரான துன்னாலையில் தங்க முடிவாயிற்று. (என் எதிரிகள் 'இவன் பெண்டாட்டி ஊரில்தான் தங்குவான், சொந்த ஊரை மறந்து விட்டான்' என்று கதை கட்டுகிறார்கள். நம்ம வேண்டாம் !). வழமையாகப் புலம் பெயர் தமிழன்கள் செய்கிறமாதிரி ஊரில் நுளம்பு, எறும்புக் கடி, குழாயில் சுடுதண்ணி இல்லை, 'இஞ்சை ரோட் எல்லாம் இசுக் குட்டியாக இருக்கு', டிரைவிங் படுமோசம், சாப்பாடு அசுத்தம் என்று அலம்பறை பண்ணி அலுத்துப் போனதால் புண்ணிய ஸ்தலங்களைத் தரிசிக்கலாம் என்று ஒரு எண்ணம் உண்டாயிற்று. இப்படித்தான் வல்லிபுரம் ஆழ்வார் கோவில் போனோம்.

போனமுறை (1994!) பார்த்ததிற்கு கோவில் இன்னும் பெருப்பித்ததாய்த் தெரிகிறது. மணல் வீதியும் மரங்களும் அப்படியே....

"ஓம் நமோ நாராயணா" என்று டிஜிட்டல் எழுத்துக்கள் கோபுரத்தில், நுழைவாசலிற்குச் சற்று மேல் மிளிர்கின்றன. மார்கழி மாதம் என்றாலும் நல்ல வெயில். வெளிவீதியில் வழமைபோல் பிச்சைக்காரர்கள். அநேகர் வன்னி யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் என்பது அவர்கள் கூற்றிலிருந்து தெரிகிறது. பிச்சைக்காரர்கள் என்றால் மழிக்காத தாடி, மீசை, அழுக்கு உடை என்று அன்றிலிருந்து மாறவில்லை. என்றாலும் இப்போது அநேகம் பிச்சைக்காரர்களிடம் தகரப் பேணி இல்லை. அதுக்குப் பதிலாக ஒரு துண்டை விரித்துவிட்டு இருக்கிறார்கள். இல்லாவிட்டால் வெறுங்கையுடன். தற்போதைய பணவீக்கத்தில் பிச்சை போடுவதென்றாலும் குறைந்தது பத்து ரூபா நோட்டு போடவேண்டும். தகரப் பேணியைக் கண்டால் நீங்கள் சில்லறைக் காசைப் போட்டுவிட்டு சில்லறைக் காசு, தகரப் பேணியில் 'டங்' என்று மோதி ஒலிக்க ஒருவித திருப்தியுடன் வீடு போய் விடுவீர்கள்.

கோவிலின் உயிர்ப்பு வெளி வீதியில்தான் இருக்கிறது என்பது என் சிற்றறிவுக்கு விளங்கிய வகையில் சரி. மரங்கள், மணல், ஐஸ்கிறீம் வான், கச்சான் விக்கிற ஆச்சிமார், பல்பொருள் கடைகள், டிஜிற்றல் SLR கமராவால் கண்ட எதையும் போட்டோ எடுக்கும் புலம்பெயர் புதுவெள்ளைக்காரன் என்று சுவாரசியமான விசயங்கள். கோவிலின் பின்புறத்தில் இருந்த ஏதோ ஒரு மரத்திற்குக் கீழ் நின்று கொண்டு வாய் பார்க்கும்போதுதான் இவர் வருகிறார். எண்பது வயது மதிக்கலாம். தலையில் சடா முடி, அதோடு போட்டிபோடும் தாடி,மீசை, இடுப்பில் வேட்டி, மற்றும் நரைத்த மஞ்சள் துண்டு. கையில் ஒரு சங்கு. கையில் இருக்கும் சங்கைப் பார்த்ததும் இவர் பிச்சைக்காரன் இல்லைப் போலும் என்று நினைத்துக் கொண்டேன்.

"ப்ப்ப்பூஊஊஊஊ...." என்று சங்கை ஊதினார்.

"Hey!, Music !" என்றான் என் சின்னவன்.

இவர் சங்கை வாயிலிருந்து எடுத்து விட்டு, "Which country?" என்று கேட்டார்.

அடே இங்லிலிஷ் கதைக்கிறாரே என்று நான் யோசித்தேன். பெடியனுக்கு அவர் பேசியது புரியவில்லை.

அப்போதுதான், "இஞ்சை பாரப்பா, வைஜந்திமாலா!" என்றாள் என் மனைவி.

வைஜந்திமாலா பற்றி முதலே கேள்விப்பட்டிருக்கிறேன். கேள்விப்பட்டதில் இருந்து இவர் வைஜந்திமாலா பக்தனாக இருக்கலாம் என்று ஊகித்தும் வைத்திருந்தேன். நான் சிறுவயதுகளில் சிறீதேவி பக்தர்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். டீ ஆர் ராஜகுமாரியைப் பார்க்க காணி விற்று இந்தியா போன இன்னொரு பக்தரைப் பற்றியும் கேள்விப்பட்டிருக்கிறேன். என் இருபதுகளில் 'யாரோ ஒரு பெண் கொழும்பில் இருந்து புறப்பட்டுச் சென்னையை அடைந்து நடிகர் பிரசாந்தைக் கல்யாணம் கட்டித்தான் வீடு போவேன்' என்று அடம் பிடித்ததும் வீரகேசரியில் வந்திருந்தது. எல்லாம் கேள்விப்பட்டதுதான். அப்படி ஒருவரைச் சந்தித்தது, முதல் முறையாக அந்த 'வல்லிபுரம் ஆழ்வார்' அருளில் அவர் சந்நிதானத்திலேயே நடந்தது.

யாழ்ப்பாணம் நன்றாக இருந்த அந்தக்காலம். சினிமா நடிகர்/நடிகைகள், பாட்டுக்காரர்கள், மற்றும் வேறுபல கலைஞர்களை இந்தியாவிலிருந்து வருவித்து ஒரு நிகழ்ச்சியை வைத்துப் எங்கள் கலை, பண்பாடு, விழுமியங்களைக் கட்டிக்காப்பது அப்போதே தொடங்கியாயிற்று என்பது வரலாறு தெரிந்த, தெரியாத யாரும் ஒத்துக்கொண்ட ஒன்று. அப்படி ஒரு காலத்தில் தென்னிந்தியாவில் பிரபலமான நடிகை வைஜந்திமாலா யாழ்ப்பாணம் வருகிறார். " விளம்பரம் போட்டு, ரிக்கற் விற்று ஏதோ ஒரு மேடையில் கட்டுக்கடங்காதா கூட்டத்தின் மத்தியில் வைஜந்திமாலா. அவர் என்ன பேசியிருப்பார் என்று தகவல்கள் கிடைக்கவில்லை. என்றாலும் "எனக்கு ஒங்க ஊர் இடியப்பம், புட்டு என்றால் ரொம்ம்ம்பப் பிடிக்கும்" என்று கூந்தலைத் கோதிக்கொண்டு சொல்லியிருப்பார் என்று ஊகிப்பது சிரமம் இல்லை.

சிற்றம்பலம் அப்போது இளைஞன். அப்போதுதான் படிப்பு முடித்து ஒரு வாத்தியார் வேலையும் கிடைத்திருந்தது. ஒரு வாலிபக் குறுகுறுப்பில் சிநேகிதங்களுடன் ரிக்கற் வாங்கி வைஜந்திமாலாவைப் பார்க்க வருகிறார். (வீட்டில் 'மாட்டுக்குத் தவிடு வாங்க யாழ்ப்பாணம் போறன்' என்றுதான் சொல்லியிருந்தார்)

வைஜந்திமாலாவின் அழகில் ,கூட்டத்தோடு கூட்டமாய் நின்று கொண்டிருந்த சிற்றம்பலம் அண்ணன், தன்னை மறந்தார். எல்லாவற்றையும் மறந்தார். "மணந்தால் அவளை, இல்லாவிட்டால் நான் பிரமச்சாரி" என்று ஒரு திட சங்கற்பம் எடுத்தார். (அதை இன்றுவரை கடைப்பிடிக்கிறார்.)

நிகழ்ச்சி முடிந்து வைஜந்திமாலா இந்தியா போய்விட்டார். சிற்றம்பலம் இலேசாகக் மனநிலை குழம்பி விட்டார். மறுநாள் "வைஜந்திமாலா எங்கே?" என்று நண்பர்களைக் கேட்டிருக்கிறார். "தெரியாதா? அவர் இந்தியா போயிட்டார்" என்று பதில் வருகிறது. சிற்றம்பலத்தாரின் பூகோள அறிவு கொஞ்சம் வீக். "இந்தியா எங்கே இருக்கிறது?" என்று அடுத்த கேள்வியை வீசீயிருக்கிறார்.

"பருத்துறைக் கடலுக்கு அந்தப்பக்கம் இருக்குது" என்று மூக்கைச் சொறிந்து கொண்டே சொன்னார் அவர் நண்பர் நடராசா.

அதற்குப் பிறகு திருவாளர் சிற்றம்பலம் என்ன நினைத்தார் என்று தெரியவில்லை. ஆனால் தான் வசிக்கும் துன்னாலையூரிலிருந்து பருத்தித்துறைக் கடற்கரை மட்டும் தினமும் காலை ஓடிச் செல்வார். கப்பல் ஏதாவது வராதா அதில் வைஜந்திமாலா வரமாட்டாரா? என்று பார்க்கத்தான் இப்படித் தினமும் ஓடிச் செல்கிறார் என்று ஊரவர் பேசிக்கொண்டார்கள். அவர் இயற் பெயரும் எல்லாரும் மறந்து 'வைஜந்திமாலா" ஆகிவிட்டது.

வைஜந்திமாலா யாழ்ப்பாணம் வந்து அதுக்குப் பிறகு இலங்கையில் எத்தனையோ இனக்கலவரங்கள் வந்துவிட்டன. கண்ட போனபாட்டுக்குச் துவக்குக் சூடு, ஷெல் வீச்சு, விமானக் குண்டு வீச்சு, இடம் பெயர்வுகள் அன்று பல நிகழ்வுகள் நடந்துவிட்டன. கடைசியாக முள்ளிவாய்க்கால் துயரமும் நடந்து போயாயிற்று.

ஆனால் வைஜந்திமாலா என்கின்ற சிற்றம்பலம் இன்னமும் பிரமச்சாரி. அத்தோடு தினமும் துன்னாலையில் இருந்து பருத்தித்துறைக் கடற்கரைவரை விரைவு நடை போடுகிறார். (வயதாகி விட்டதால் இப்போது முன்புபோல் ஓட முடிவதில்லை).

"வைஜந்திமாலா ஒரு கப்பலில் வந்திறங்குவார்" என்றுதான் இன்னும் நம்பிக்கொண்டிருக்கிறார்.

-------------------------


புகைப்படம்:

http://radhikasree.hubpages.com/hub/Vyjayanthimala-the-beautiful-actress-of-Bollywood-during-1950-1970


3 comments:

  1. //வைஜந்திமாலா'வை நான் நேருக்கு நேர் சந்திப்பேன் என்று கனவிலும் நினத்திருக்கவில்லை.//

    வைஜெயந்திமாலாவை தாடிமீசையுடன் சந்திப்பீர்கள் என்று நானும் நினைக்கவில்லை :-)

    ReplyDelete
  2. ரசிகர் நிலையைவிட வாசகர் நிலைதான் ஏமாற்றம் வைஜெயந்திமாலா வரவேயில்லை!)))))))))))))))))))))))))))))))

    ReplyDelete