Thursday, January 8, 2015

வாசகர் கடிதங்கள் மற்றும் மாடு மேய்ப்பது....

ஜெமோ அடிக்கடி வாசகர் கடிதங்களை பிரசுரிக்கிறார். இலக்கியம், இலக்கணம், பித்தம்/கணையம் சம்பந்தமான பிரச்சினை என்று வகைதொகையின்றி வருகின்றன. தனக்குத்தானே எழுதிக் கொள்கின்றார் என்று ஒரு குற்றச் சாட்டும் உண்டு. அவர் இலக்கியத்திலும் மற்றும் பெண்கள், இலங்கைத்தமிழர்களை மட்டம் தட்டுவதிலும் ஒரு சுழியன். போகட்டும், இது இப்படி என்றால் தனக்கு வாற வாசகர் கடிதங்களை ஒரு புத்தகமாகப் போடப் போகிறாராம் ஜேகே. ஜீ, வாசகர் கடிதங்களைப் படித்து வடிகட்ட என்று ஒருவரைச் சம்பளத்திற்கு வைத்திருக்கிறாராம்.

எனக்கு வரும் 'வாசகர்' கடிதங்களெல்லாம், "நீ எல்லாம்......" என்று சொல்லிவைத்தது மாதிரித் தொடங்குகின்றன. தொடர்ந்து கெட்ட வார்த்தைகளில் அர்ச்சனை... பிரசுரித்தால் சாரு நிவேதிதா கூடச் சங்கோஜப் படுவார். இதெல்லாம் ஒரே பேர்வழி எழுதுவதா இல்லைப் பல பேரா என்பது புரியவில்லை. என்றாலும் போன ஞாயிற்றுக் கிழமை வந்த ஈமெயில் கொஞ்சம் டீசன்ட்டாக இருந்தது.

'அன்பின் சக்திவேல்' என்று தொடங்கவே அடே கொஞ்சம் வித்தியாசமாக உள்ளதே என்று ஒரு சின்ன அதிர்ச்சி. என்றாலும் மிச்சம், நான் தொடர்ந்து பதிவுகளை எழுதாததையிட்டு மகிழ்ச்சி தெரிவித்தார். "Keep the good work" என்று இங்கிலிசில் ஒரு வரியும் சேர்த்திருந்தார். அதோடு விட்டிருந்தால் கூடப் பரவாயில்லை. உங்களுக்கு வீட்டில் சும்மா இருக்க முடியாவிட்டால் மாடு மேய்க்க முயற்சிக்கவும் என்று ஒரு அட்வைஸ் உடன் முடித்தார். இங்குதான் சிக்கல் தொடங்குகிறது.

மாடு மேய்ப்பது இன்னாட்களில் சுலபம் இல்லை. அதுக்கும் படிப்பு, எக்ஸ்பீரியன்ஸ் எல்லாம் தேவை. மாடு மேய்ப்பதற்குப் படிப்பு எதற்கு, எக்ஸ்பீரியன்ஸ் மட்டும் போதும் என்று ஒரு பார்ட்டி அலம்பல் பண்ண, இன்னொன்று 'அதெல்லால் அந்தக் காலம், இப்ப ஒரு certification ஆவது இல்லாவிட்டால் வேலைக்கு ஆகாது.. நீங்கள் 10 வருடங்கள் அனுபவத்தில் கற்றதை நாங்கள் ஆறு மாதம் கோர்ஸ், ஆறுமாதம் பயிற்சியில் எடுத்து விடுவோம்; என்று மார் தட்டுகிறார்கள்.

போன கிழமை சீய்க்.com.au இல் வந்த விளம்பரம் இது...

தேவை : மாடு மேய்ப்பனர்.

-இருபது வருட அனுபவம், ஆனால் இருபத்தந்து வயதுக்குள் இருந்தால் நலம். (வயது ஒரு பிரச்சினை இல்லை என்றாலும் கொன்ரோல் இல்லாமல் ஓடித் தப்பப் பார்க்கும் மாடுகளைத் துரத்திப் பிடிக்க இயலுமானவர்கள் மட்டும் விண்ணப்பிக்கவும்)

-'மாடு மேய்ப்பியல்' இல் குறைந்தது மாஸ்டர்ஸ் டிகிரி ( phd முடித்தவர்கள் 'மாட்டுக்குத் தவிடு வைக்கும்' வேலைக்குக் கொன்சிடர் பண்ணப் படுவார்கள்)

-படிக்கும் காலங்களில் கணக்கு, மற்றும் தமிழ், ஆங்கில வாத்திமார்கள் "நீ மாடு மேய்க்கத்தான் லாயக்கு" என்று திட்டியிருக்க வேண்டும். (கட்டாயம் இதை நிரூபிக்கவும் வேண்டும்)

-படிக்கும் காலங்களில் வகுப்பில் கடைசி இரண்டு வரிசைகளிற்கு முன்னால் உட்கார்ந்திருக்கக் கூடாது.

-மாடு மட்டுமல்ல, ஆடு, வாத்து, கோழி மேய்ப்பதிலும் அனுபவம் இருக்கவேண்டும்.

-மாடு மற்றும் இதர விலங்குகளிற்கு வரும் சிறு சிறு நோய்களிற்கு சிகிச்சைகள் அளிக்கத் தெரிந்திருக்கவேண்டும். தேவைப்படின் விலங்குகளிற்குப் பிரசவமும் பார்க்க நேரிடும் என்பதால் அது பற்றிய அறிவு மற்றும் அனுபவம்..

----
-----
(தொடர்கிறது)
----

சரி போகட்டும் என்று 'விண்ணப்பி' என்று அழுத்தினால் வழக்கப் போல் 'பயோ டேற்றா, மற்றும் கவர் லெட்டர்' கேட்கும் என்று பார்த்தால் அது ஒரு புது இணையத்திற்கு எடுத்துச் செல்கிறது.

சவால் ஒன்று: நீங்கள் மாடு மேய்க்கும்போது ஒரு பெரிய பிரச்சினை. 1500 மாடுகள் உங்களிடம். நீங்கள் நிற்பது தண்ணீர் இல்லாத காடு. தண்ணீர் வண்டி ரிப்பெயர் ஆகி வர முடியவில்லை. 1500 மாடுகளும் தாகத்தில்.. இதில் 233 கன்றுகளும் உள்ளடங்கும். நீங்கள் எப்படி இந்தப் பிரச்சினையை அணுகுவீர்கள்' என்று 200 சொற்களுக்குள் விளக்கவும்.

சவால் இரண்டு
: வழக்கமாக மாடு மேய்க்கும் எக்ஸ்பேர்ட் வடிவேல் இன்று லீவு. நீங்கள் புதிதாக வேலைக்குச் சேர்ந்துள்ளீர்கள். முதலாளி இன்று உங்களை வேலையத் தொடங்கச் சொல்லிக் கேட்கிறார். ஒரு சின்னப் பிரச்சினை வடிவேல் என்ன செய்கிறார் என்று முதலாளிக்குக் தெரியாது, யாருக்கும் தெரியாது. இப்போது நீங்கள் வேலையைத் தொடங்க வேண்டும். என்ன செய்வீர்கள்?

இப்படி இருபத்தைந்து சவால்கள். சொல்ல மறந்துவிட்டேன், இது ஒரு அரசாங்க வேலை.


********

இப்போது சொல்லுங்கள் மாடு மேய்பது என்ன சுலபமான வேலையா?


3 comments:

 1. கீப்பப் த குட் வேர்க் :-)

  ReplyDelete
  Replies
  1. அவர் சொன்னது எழுதாதற்கு... தாங்கள்தானா அவர்?

   Delete
 2. had a good time on reading. Jeykkumar

  ReplyDelete